×

குழுக்கடன் என்ற பெயரில் கந்து வட்டி கும்பல் மோசடி

கம்பம் செப் 25.தேனி மாவட்டம் முழுவதும் முறையான உரிமம் இல்லாமல் மகளிர் சுய உதவி குழுக்களை குறிவைத்து கந்து வட்டிக்கு கொடுக்கும் கும்பலால் குடும்பத்தலைவிகள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். கந்துவட்டி கும்பலை மாவட்ட நிர்வாகம் களை எடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது. தென் மாவட்டத்தில் விவசாயத்தை மூலதனமாக கொண்டுள்ள கம்பம் மற்றும் அதன்  சுற்று பகுதிகளான கூடலூர், கே.கே.பட்டி, ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் கந்துவட்டி கும்பல் அராஜகம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கந்து வட்டியை ஒழிக்க அரசு பல சட்ட விதிமுறைகளை கொண்டுவந்தாலும் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் சட்டம் பெயரளவில் உள்ளது. 100 ரூபாய் முதலுக்கு  500 ரூபாய் வட்டி வாங்கும் அவலம் கம்பம் நகரில் வாரவட்டி என்ற பெயரில் நடந்தேறி வருகிறது.

கந்து வட்டி என்ற பெயர் மாறி மகளிர் சுய உதவி குழுக்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களுக்கு எந்தவிதமான லைசென்ஸ் இல்லாத கந்துவட்டி கும்பல் 10 பேர் கொண்ட சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 லட்சம் தருகிறார்கள். அதற்கு ரூ.10,000 வட்டியாக ஆரம்பத்தில் பிடித்துக் கொண்டு மீதி உள்ள 90 ஆயிரத்தை குழுக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதை குழுவில் உள்ள 10 பெண்களும் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். வாரம் ரூ.500 வீதம் 25 வாரம் கட்ட வேண்டியது வரும். 25 வாரம் என்பதே கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஆகும். ஆறு மாத காலத்திற்கு மூவாயிரம் 500 ரூபாய் வட்டி செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. சராசரியாக மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு பத்து ரூபாய் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. குழுவில் உள்ள பெண்களிடம் ஆதார் எண் ஜெராக்ஸ், வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து ப்ரோ நோட்டில் கையெழுத்து என பல்வேறு கையெழுத்துக்கள் வாங்கப்படுகின்றன. குடும்ப சூழ்நிலை கருதி வட்டி விகிதம் என்ன என்பதை யாரும் கணக்கு பார்க்காமல் வாங்குகின்றனர். இதில் குடும்பத் தலைவிகள் சிக்கிக்கொண்டு மன உளைச்சலுக்கும் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.

இதுபோன்ற கந்துவட்டி கும்பலை உடனடியாக தடை செய்து பொதுமக்களுக்கு அரசு முறையான கவுன்சிலிங் ஏற்பாடு செய்து கொடுத்து அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வங்கிகளில் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கம்பம் பகுதியில் இது போன்ற சுய உதவிக் குழுக்களின் பெண்களை குறிவைத்து கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கந்துவட்டி கும்பல்கள் இயங்கி வருகின்றன. கோடிக்கணக்கில் இதனுடைய வர்த்தகம் நடைபெறுகிறது சுய உதவிக்குழு பெண்களிடம் அவர்களது ஆதார் அட்டை ரேஷன் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு நூற்றுக்கு பத்து என்ற வட்டி விகிதத்தில் மைக்ரோ பைனான்ஸ் என்று வட்டிக்கு விடுகிறார்கள். கந்து வட்டி தொழிலில் பரிணாம வளர்ச்சியே இந்த மைக்ரோ பைனான்ஸ் எனப்படும் இன்னொரு கந்துவட்டி ஆகும். எனவே அரசு இதை முறைப்படுத்த அரசு அல்லாத தனி நபர்கள் யாரும் அதிக வட்டிக்கு பெண்களிடம் வசூலித்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : gang ,gangs ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...