×

பழநியில் காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணி மந்தம்

பழநி, செப். 25: பழநியில் காவிரி குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகள் தாமதமடைவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.பழநி நகரின் பல்வேறு வார்டுகளில் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பிரதான சாலைகளின் வழியாக கொண்டு செல்லாமல் குடியிருப்பு பகுதிகளின் வழியாக குழாய்கள் கொண்டு செல்லப்படுகிறது.  இதனால் பழநி நகரில் பல கோடிகள் மதிப்பீட்டில் போடப்பட்ட புதிய தார்சாலைகள் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குழாய்கள் பதிக்கும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். குடிநீர் குழாய்களுக்கான காற்று வால்வுகளுக்கு பல இடங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் தரை தளத்தில் இருந்து 2 அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. சாலைகளில் இதுபோன்ற திடீர் சுற்றுச்சுவர்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பழநி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் குருசாமி கூறியதாவது, ‘பிரதான சாலைகளின் ஓரத்தில் குழாய்களை கொண்டு சென்றால் செலவு குறையும். ஆனால், பழநியில் குடியிருப்புகளின் வழியாக புதியதாக போடப்பட்ட தார்சாலைகளை பெயர்த்து குழாய்களை கொண்டு செல்கின்றனர். மேலும், பல இடங்களில் குறிப்பிட்ட அளவு ஆழத்தில் தோண்டாமல், மேலாக குழாய்களை பதித்து செல்கின்றனர். சாலைகளில் கல், மண் போன்றவை கொட்டிக்கிடக்கும் நிலையில் இதற்காக அமைக்கப்பட்ட வால்வு தொட்டிகளுக்கு விபத்தை உண்டாக்குவதாக உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பிய நிலையில், பணிகள் முடித்து விட்டதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தவறான தகவல் தந்துள்ளனர். ஆனால், பணிகள் இன்னும் முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Cauvery ,Palani ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை