×

நாகர்கோவிலில் சாலையை சீரமைத்த டிராபிக் எஸ்.ஐ.க்கு எஸ்.பி. பாராட்டு நேரில் அழைத்து சால்வை அணிவித்தார்

நாகர்கோவில், செப்.25 : நாகர்கோவிலில் போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருந்த போது, சாலையில் கிடந்த பள்ளத்தை கற்களை போட்டு சீரமைத்த எஸ்.ஐ.க்கு எஸ்.பி. ஸ்ரீநாத் பாராட்டு தெரிவித்தார். நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதால் மாநகரம் முழுவதும் சாலைகள் படுமோசமாக உள்ளன. உள்ளூர் சாலைகள் மட்டுமின்றி மாநில, தேசிய நெடுஞ்சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருவதால், குண்டு, குழிகளில்  பைக்கில் வருபவர்கள் விழுந்து, விபத்தில் சிக்கி வருகிறார்கள். நாகர்கோவில் - ஈத்தாமொழி விலக்கு சந்திப்பில் கோட்டார் பகுதியில் சாலையோரம் பெரிய பள்ளம்  கிடந்தது. இந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி பைக்கில் வருபவர்கள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் அங்கு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த நாகர்கோவில் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், பைக்கில் வருபவர்கள் படும் அவஸ்தையை நேரில் பார்த்து வேதனை அடைந்தார். பின்னர் அவராகவே தன்னந்தனியாக அந்த பகுதியில் ரோட்டோரத்தில் கிடந்த கற்களை தேடி எடுத்து வந்து பள்ளத்தில் போட்டு நிரப்பினார்.

அவர் சாலையில் உள்ள பள்ளத்தில் கற்களை எடுத்து போடுவதை, அந்த பகுதியில் இருந்த கடைக்காரர் ஒருவர், வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு, எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். சிறிது நேரத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி, எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. பேஸ் புக், டுவிட்டரிலும் இந்த வீடியோக்கள் வெளி வந்தன. இந்த வீடியோ, மாவட்ட எஸ்.பி. நாத் கவனத்துக்கும் சென்றது. அவர் நேற்று காலை எஸ்.ஐ. பால கிருஷ்ணனை, தனது அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். தன்னை சந்திக்க வந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணனை பாராட்டிய எஸ்.பி. ஸ்ரீநாத், அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். காவல்துறை பணி என்பது சமூக பொறுப்புள்ள, மக்களின் மீது அக்கறை கொண்ட பணி ஆகும் என்று எஸ்.பி. ஸ்ரீநாத் தெரிவித்தார். டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண் உடன் இருந்தார்.

Tags : SB ,road ,Nagercoil ,
× RELATED சிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம்: எஸ்.பி.இலக்கியா வலியுறுத்தல்