×

5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

புதுச்சேரி, செப். 25: 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகள் நாளை (26ம் தேதி) முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளன. இந்நிலையில், புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று மதியம் புதிய பேருந்து நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகள் வெளியே வரும் பகுதியில் அமர்ந்து 60க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் 15 நிமிடத்துக்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த மறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Law students ,election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...