×

விழுப்புரம் அருகே நள்ளிரவில் பேருந்தை கடத்தி சென்ற போதை ஆசாமி

விழுப்புரம், செப். 25: விழுப்புரம் அருகே நள்ளிரவில் போதை ஆசாமி பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து பழுது பார்ப்பதற்காக கோலியனூர் மெக்கானிக் செட்டுக்கு வந்துள்ளது. அதனை நேற்றுமுன்தினம் ஊழியர்கள் பழுது பார்த்துவிட்டு விழுப்புரம்- புதுச்சேரி சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இரவு காவலர் தட்சிணாமூர்த்தி என்பவர் மழை பெய்ததால் செட் உள்ளே சென்றார். அப்போது 2.30 மணியளவில் வெளியே வந்துபார்த்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மாயமாகி இருந்தது. இதையடுத்து வாட்ச்மேன் தட்சிணாமூர்த்தி செட் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பேருந்து எண்ணை குறித்துக் கொண்டு மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.

இந்த நிலையல் கடத்திச் செல்லப்பட்ட பேருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக சென்ற காட்சி விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த மார்க்கத்தில் உள்காணை, அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கல்பட்டு சாலையில் காணை போலீசார் ரோந்து சென்றபோது, கடத்தப்பட்ட பேருந்து சாலையோரம் நின்றிருந்தது. மேலும் பேருந்தை ஓட்டிச் சென்ற நபர் குடிபோதையில் பேருந்திலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.  இதையடுத்து பேருந்தை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர். பேருந்தை கடத்திச் சென்ற போதை ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Asami ,Villupuram ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...