×

நெல்லை பாடகசாலை கிராமத்தில் எலி தொந்தரவை தடுக்க ஆந்தை கம்பம்

நெல்லை: நெல்லை குன்னத்தூர் அருகே பாடகசாலை கிராமத்தில் வயல்களில் எலி தொந்தரவை தடுக்க விவசாயிகள் ஆந்தை கம்பம் அமைத்துள்ளனர். நெல்லை குன்னத்தூர் அருகே திருவேங்கடநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாடகசாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் எலி தொந்தரவை தடுப்பதற்காக ஆந்தை கம்பம் அமைத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு கூறியதாவது: கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் கார்சாகுபடி செய்துள்ளோம். நெல்லை கால்வாய் மூலம் எங்களுடைய வயல்களுக்குத் தேவையான பாசன நீர் கிடைக்கிறது. 15 ஏக்கர் நிலத்தில் 125 நாள் நெற்பயிரை பயிர் செய்துள்ளோம். இப்பயிர்களை இன்னும் 40 நாட்களுக்குள் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் நெற்பயிர்களில் எலிவெட்டு தொந்தரவு அதிகமுள்ள 1 ஏக்கர் வயலில் அக்கால முறைப்படி ஆந்தைக்கம்பம் அமைத்துள்ளோம். வளர்ந்துவரும் நெற்பயிர்களின் மீது நாரை, கொக்கு போன்ற பறவைகள் வந்து அமர்வதால் அப்பயிர்கள் சாய்ந்துவிடும். அக்காலத்தில் இதைத் தடுக்க வயலில் கம்பினை நட்டு அதில் துணியைக் கட்டி பறக்க விடுவார்கள் அல்லது கம்பில் வைக்கோலை வைத்து பொம்மைபோல் கட்டி வைப்பார்கள். இதேபோல் இரவு நேரங்களில் எலிகளை பிடிக்கக்கூடிய ஆந்தைகள் வந்து  அமர்வதற்கு வசதியாக கம்பின் நுனியில் வைக்கோல் அல்லது பனை அல்லது தென்னையின்  அடிமட்டை பகுதியை கட்டி ஆந்தை கம்பங்களை நட்டு வைப்பார்கள். தற்போது வயல்களில் அமைத்துள்ள ஆந்தை கம்பங்கள் மூலம் எலிவெட்டு பிரச்னை குறைந்துள்ளது. இதுபோல பழமையான முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ரசாயன எலி மருந்து பயன்பாடுகளை தவிர்ப்பதோடு, அதற்கான செலவுகளையும் குறைக்கலாம். என்று அவர் தெரிவித்தார்….

The post நெல்லை பாடகசாலை கிராமத்தில் எலி தொந்தரவை தடுக்க ஆந்தை கம்பம் appeared first on Dinakaran.

Tags : Nellai Padagasalai ,NELLAI ,Padagasalai ,Gunnathur ,Nellai… ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு