×

குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை துவக்கம்

குளித்தலை, செப். 25: குளித்தலை- மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு
மண்பரிசோதனை பணி துவங்கி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் உள்ளது குளித்தலை ரயில்நிலையம். எர்ணாகுளம்-நாகூர், மங்களுர்-சென்னை, மைசூர்-மயிலாடுதுறை, கோயமுத்தூர்- மயிலாடுதுறை விரைவு ரயில்களும், அதேபோல் பாலக்காடு- திருச்சி, ஈரோடு- திருச்சி, கரூர்- திருச்சி பயணிகள் ரயில்களும், எதிர்மார்க்கத்தில் சென்னை- மங்களுர், நாகூர்- எர்ணாகுளம், மயிலாடுதுறை- மைசூர் விரைவு ரயில்களும் திருச்சி- கரூர், ஈரோடு- மங்களுர் செல்லும் பயணிகள் ரயில்களும் தினந்தோறும் குளித்தலை ரயில் நிலையம் வழியாக
செல்கின்றன.அதுமட்டும் அல்லாது அவ்வப்போது சரக்கு ரயில்களும், சிறப்பு ரயில்களும் இவ்வழியாகத்தான் செல்கிறது. இந்நிலையில் குளித்தலை ரயில்நிலையம் அருகே குளித்தலை- மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இவ்வழியாக மதுரை, திண்டுக்கல், மணப்பாறையில் இருந்தும், அதேபோல் எதிர்மார்க்கத்தில் கரூர்-துறையூர், முசிறி-நாமக்கல் சேலம் பெட்டவாய்த்தலை ஆகிய ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த குளித்தலை மணப்பாறை சாலையில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.

ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்பட்டால் சாலையின் இருபுறமும் 1 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்;டு, கேட் திறந்தவுடன் போக்குவரத்தை சீர்செய்யமுடியாமல் வாகனங்கள் திணறியவாறு ரயில்வே கேட்டை கடந்து செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குளித்தலை மணப்பாறை சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி பழுதாகியும், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மோதியும் கேட்டின் கம்பி உடைந்து பலமுறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே கேட் பழுது ஆகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்திருந்தனர்.இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதல்கட்டமாக குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஆய்வு பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2ம் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் மேம்பாலம் அமைக்கும் பணி சேலம், மான்ஸ் சரோவர் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் துவங்கி நடைபெற்று வந்தது. இதுகுறித்து அப்போது அந்நிறுவன பணியாளரிடம் கேட்டபோது, குளித்தலை- மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பு பணி நடைபெறுகிறது. அதனால் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் 24 மணி நேரமும் ரயில்வே கேட் வழியாக இருபுறமும் எத்தனை வாகனங்கள் செல்கிறது என அனைத்து வாகனங்களையும் கணக்கெடுத்தோம்.

இந்த கணக்கெடுப்பினால் அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள போக்குவரத்தை வைத்து அதற்கு தகுந்தாற்போல் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துவது ரயில்வே மேம்பாலம் ஏறும் இறங்கும் தளத்தில் 400 மீட்டர் வரை சாலை அமைத்தல் அதற்காக நிலம் தேவைப்பட்டால் நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு நில அட்டவணை தயாரித்து பாலம் உயரம் நீளம் உயர்த்த திட்டமிடப்பட்டு அதற்கான அறிக்கையை நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பி வைப்போம். அதன் அடிப்படையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு ரயில்வே மேம்பாலம் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து 3ம் கட்டமாக மண் பரிசோதனை பணி தொடங்கியது. மணப்பாறை சாலையோரம் பலஇடங்களில் இயந்திரங்களை வைத்து மண்பரிசோதனை செய்யப்பட்டு அந்த மண்ணை மண்பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்து உறுதித்தன்மை தெரிந்த பின்னர் அடுத்தகட்ட பணிகள் முடுக்கி விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒவ்வொரு கட்டமாக பணிகள் நடைபெற்று வருவதை பார்த்தால் விரைவில் குளித்தலை- மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் வருவது உறுதி என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : railway bridge ,
× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் ‘செல்பி’...