×

கும்பகோணம் அரசு கல்லூரியில் எம்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியராக பணியாற்ற மாட்டோம்

கும்பகோணம், செப். 25: கும்பகோணம் அரசு கல்லூரியில் எம்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியராக பணியாற்ற மாட்டோம் என்று பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி எம்பில் மாணவி ஒருவரை வழிகாட்டும் பேராசிரியர் ரவிச்சந்திரன் தனிமையில் அழைத்ததால் மனமுடைந்து ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை நிர்வாகம் அறிவித்தது. அதன்பின் கல்லூரி கல்வி இயக்குனர் வந்து ஆய்வு செய்து இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைத்தார். இதன்பின்னர் கல்லூரி துவங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரியில் உள்ள ஒரு சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்கள், எம்பில் படிப்பில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியராக பணியாற்ற மாட்டோம் என்று கூறி கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.இந்நிலையில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் உள்ள 16 துறைகளில் 300க்கும் மேற்பட்டோர் எம்பில் படிப்புக்கு கடந்த மாதம் விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களுக்கு வரும் 30ம் தேதிக்குள் சேர்க்கை நடந்து வழிகாட்டும் பேராசிரியரை பணியமர்த்த வேண்டும். இதனால் கல்லூரி முதல்வர் சிவநேசன், கடிதம் கொடுத்த பேராசிரியர்களை தொடர்பு கொண்டு வழிகாட்டும் பேராசிரியராக பணியாற்றுங்கள் என்று தெரிவித்தும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதையறிந்த சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் நேற்று மதியம் கல்லூரி முதல்வர் சிவனேசனிடம் நேரில் சென்று எம்பில் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக வழிகாட்டும் பேராசிரியர்களை பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், கல்லூரியில் நடந்த துயர சம்பவம் எங்களை பாதித்துள்ளது. எங்களை வழிகாட்டும் பேராசிரியராக பணியாற்ற யாரும் வற்புறுத்த முடியாது. எங்களுக்கு கொடுக்கிற சம்பளத்துக்கு என்ன வேலையோ அதை செய்து விட்டு செல்வோம். கூடுதலாக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்து பொதுக்குழுவை கூட்டி நல்ல முடிவை எடுப்போம் என்றார். இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்ட செயலாளர் சின்னைபாண்டியன் கூறுகையில், கடந்த மாதம் கல்லூரியில் நடந்த சம்பவம் தொடர்பாக எம்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியராக பணியாற்ற மாட்டோம் என 59 பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரிடம் முறையிட்டோம். அதற்கு வழிகாட்டும் பேராசிரியராக பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் கடிதம் கொடுத்ததை பற்றி கல்லூரி கல்வி இயக்குனருக்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்று கூறினார். மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு வழிகாட்டு பேராசிரியர்களாக பணியாற்ற உத்தரவிடுங்கள் என்று முதல்வரிடம் கூறியுள்ளோம். இதுகுறித்து அனைத்து கட்சி சார்பில் இன்று ஆர்டிஓவிடம் மனு கொடுக்கவுள்ளோம் என்றார்.


Tags : mentor ,Embil ,Kumbakonam Government College ,
× RELATED குடந்தையில் இருந்து சுற்றுலா...