×

கும்பகோணம் பகுதியில் 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 2 கடைகள், குடோன்களுக்கு சீல் வைப்பு

கும்பகோணம், செப். 25: கும்பகோணம் பகுதியில் தடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து விற்பனைக்காக வைத்திருந்த 2 கடைகள் மற்றும் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.கும்பகோணம் கும்பேஸ்வரர் சன்னதி தெரு, வடக்கு வீதி, தெற்கு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபைகள், கப்புகள், தட்டுகள், நானோ பைகள் அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நகராட்சி ஆணையர் (பொ) ஜெகதீசன் உத்தரவின்பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், முருகானந்தம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், நானோ பைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.3.20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கும்பேஸ்வரர் கோயில் வடக்குவீதியில் உள்ள சோழாராம் மற்றும் பத்மராம் ஆகிய இருவருக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே மூன்று முறை அபராதம் விதித்தும், இரவு 7 மணிக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்ததால் அவர்களது 2 கடைகள் மற்றும் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது.


Tags : area ,Kumbakonam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...