×

நாகை நகராட்சியை கண்டித்து நாகூரில் முழு கடையடைப்பு போராட்டம்

நாகை,செப்.25: நாகை நகராட்சியை கண்டித்து நாகூரில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தர்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகூரில் உள்ள 11 வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி நாகூர் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடந்தது.

நாகூர் தர்கா, சின்ன கடைத்தெரு, பெரிய கடைத்தெரு, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. சுற்றுலாத்தலமான நாகூரில் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். நாகூர் பகுதிகளில் சொத்து வரி உயர்வில் நிலவும் முறைகேடுகள் தடுக்க வேண்டும். நாகூரில் பல ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து செய்து தர வேண்டும் என்று நாகூர் பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இந்த கடையடைப்பு போராட்டத்தில் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags : shop ,Nagore ,Naga ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்களுக்கு தலா மூன்று மாஸ்க் வழங்க உத்தரவு