×

நவீன அரிசி ஆலை வெளியேற்றும் சாம்பல், உமி துகள்களால் பாதிப்பு குடியிருப்புவாசிகள் கலெக்டரிடம் புகார்

திருச்சி, செப்.24: ரங்கம் தொகுதி கிழக்கு அதவத்தூர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள அரசு நவீன ஆலையிலிருந்து வெளியேறும் சாம்பல், உமி துகள்களால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவதால் நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சிவராசுவிடம், ரங்கம் தாலுகா அதவத்தூர் கிழக்கு விஸ்தரிப்பு பகுதியில் வசிக்கும் குடியிருப்போர் நல சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ரங்கம் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர் கிழக்கு விஸ்தரிப்பு முத்து பிளாட் குடியிருப்பு பகுதியில் 300 குடும்பங்கள் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு வாணிப கழக நவீன அரிசி ஆலை உள்ளது. அந்த ஆலையிலிருந்து திறந்த வெளியில் வெளியேற்றப்படும் சாம்பல், உமி துகள்களால் எங்கள் பகுதியில் சுமார் 3 கி.மீ., சுற்று பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் நடந்து சென்றாலோ, வாகனத்தில் சென்றாலோ கண்களில் சாம்பல் உமி துகள்கள் பறந்து வந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. துணிகளிலும் உணவு பொருள்களிலும் சாம்பல் படிந்து விடுகின்றது.

முதியவர்கள் குழந்தைகள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் எங்கள் பகுதி ஆழ்குழாய் குடிநீர் உப்பு நீராக மாறிவிட்டது. பலருக்கும் சுவாசக்கோளாறு உள்ளது. இதுகுறித்து நவீன அரிசி ஆலைக்கும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கும் மனு அளித்தும் எந்த பயனுமில்லை. எனவே கலெக்டர் நவீன அரிசி ஆலையை ஆய்வு செய்து, சாம்பல், உமி துகள்கள் திறந்த வெளியில் பறக்காதபடியும், நீர் ஆதாரம் கெடாமலும் தடுத்து அருகில் குடியிருப்பவர்களின் உடல்நிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Residents ,Collector ,rice mill ,
× RELATED வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம்...