×

ரத்த பரிசோதனை நிலையத்தில் ஓய்வூதியம் வாங்கித்தருவதாக முதியவர்களிடம் பணம் வசூல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி, செப்.24: திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள ஒரு ரத்தபரிசோதனை நிலையத்தில் முதியவர்களிடம் ஓய்வூதியம் வாங்கித்தருவதாக ரூ.700 பணம் வசூல் செய்வதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சிவராசுவிடம், மகாமுனி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி கல்லுக்குழி பகுதி ராமகிருஷ்ணாநகரில் இயங்கி வரும் ஒரு ரத்த பரிசோதனை நிலையத்தில் ஓய்வூதியம் வாங்கித்தருவதாக கூறி ஏழை, எளிய முதியோர்களிடம் ரூ.700 வசூல் செய்து வருகின்றனர். அதோடு அவர்களது ரேஷன் கார்டு, ஆதார்கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு எண்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். பணம் கட்டிய ரசீதும் வழங்கவில்லை. பணம் கட்டியவர்கள் பலமுறை கேட்டும் எந்த பதிலும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட ரத்த பரிசோதனை நிலையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகில இந்திய முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் சேக் அப்துல்லாஹ் அளித்த மனுவில், ‘ஆண்டுதோறும் மத்திய அரசால் சிறுபான்மை சமூக மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை ஒதுக்கப்படுகிறது. சுமார் ரூ.300 கோடி கடந்த ஆண்டு மாணவ, மாணவியருக்கு வழங்காமல் மாநில அரசால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த கல்வி ஊக்கத்தொகை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் மாணவர்களுக்கு அந்த தொகை முழுமையாக சேரவில்லை. உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா 7வது வார்டு நிர்வாகி சாகுல் அமீது அளித்த மனுவில், உக்கடை பகுதியில் மக்களுக்கு பாதிப்பில்லா வகையில் அலைபேசி உயர் கோபுரம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். திருவெறும்பூர் நியூடவுன், எஸ்.ஏ.எஸ் மற்றும் அனைத்து பகுதி குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில், ‘திருச்சி மாநகராட்சி 63வது வார்டில் பாதாளசாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நியூடவுன், எஸ்ஏஎஸ் நகரில் சாலையின் நடுவே கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்க மிகப்பெரிய தொட்டி (சம்ப்) அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சம்ப் அமைத்தால் சுகாதார கேடு ஏற்படும். ஏற்கனவே கொசுத்தொல்லையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சம்ப் அமைக்கக் கூடாது’ என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : blood test ,
× RELATED இலவச ரத்த பரிசோதனை மருத்துவ முகாம்:...