×

கழிவுகளை வெளியேற்றிய 77 சாயப்பட்டறைகள் உள்பட 10 சேகோ ஆலைகளுக்கு ₹5.41 கோடி அபராதம்

சேலம், செப். 24: திருமணிமுத்தாற்றில் கழிவுகளை வெளியேற்றிய 77 சாயப்பட்டறைகள், 10சேகோ ஆலைகளுக்கு ₹5.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை 15 நாட்களில் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கிறது. இந்த திருமணிமுத்தாற்றில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் உள்ளாட்சிகளின் சாக்கடை கழிவுகளும் கலப்பதால் திருமணிமுத்தாறு மாசு அடைந்து விட்டதாக மாணிக்கம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதிகள், திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை விட்டு மாசு அடைவதற்கு காரணமானவர்களும், உள்ளாட்சி அமைப்புகளும் அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் செயல்பாட்டை 3 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்து மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும், என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் அளித்த உத்தரவை தொடர்ந்து,  திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை கலந்து மாசு அடைவதற்கு காரணமானவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது குறித்து மத்திய மாசுகட்டுபாடு வாரிய அதிகாரிகள் கடந்த மே மாதம் சேலத்தில் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பான அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் அளிக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையின்படி, தேசிய பசுமை தீர்ப்பாயமானது தனது உத்தரவில், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வரையறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் இழப்பீட்டு கணக்கீட்டின் அடிப்படையில் விதிமீறிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை வெளியேற்றிய 77 சாயப்பட்டறைகள், 10 சேகோ ஆலைகளுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையாக ₹5 கோடியே 41 லட்சத்து 44 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், திருமணிமுத்தாற்றில் கழிவுகளை வெளியேற்றிய 77 சாயப்பட்டறைகள், 10 சேகோஆலைகளுக்கு ₹ 5.41 கோடி சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை 15 நாட்களுக்குள் வரவோலையாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சென்னை முகவரியில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஒவ்வொரு நாட்களுக்கும் 12 சதவீதம் வட்டி சேர்த்து இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும்,என்றனர்.

Tags : Seco ,plants ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்