×

திருச்செங்கோடு அருகே போலீஸ் பாதுகாப்புடன் கூட்டுறவு சங்க தேர்தல்

திருச்செங்கோடு, செப்.24: திருச்செங்கோடு அருகே, வரகூராம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இச்சங்கத்திற்கு தேர்தல்  நடந்தது. அப்போது, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த தேர்தலை நிறுத்தும்படி கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.  மேலும், கொல்லபட்டியைச் சேர்ந்த விவசாயி நடேசன் என்பவர் கோவையில் உள்ள தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பொதுப்பிரிவினருக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பின்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தேர்தல் நடத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது நாடாளுமன்றத் தேர்தலால் கூட்டுறவு கங்க தேர்தலை நடத்த முடியவில்லை.

இதையடுத்து, வரகூராம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் பதவிகளுக்கான பொதுப்பிரிவினர் தேர்தல், கடந்த 21ம் தேதி அறிவிக்கப்பட்டு நேற்று தேர்தல் நடந்தது. இதில் திருச்செங்கோடு, அணிமூர், வரகூராம்பட்டி, ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 2400 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 5 மணி வரை நடந்தது. சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டு, நேற்று வாக்குப்பதிவு நடந்ததால் பல விவசாயிகளுக்கு இந்த தேர்தல் அறிவிப்பு சென்றடையவில்லை என்றும், புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை இல்லாததால் கள்ள வாக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டதாகவும் சங்க இயக்குனருக்கு போட்டியிடும் வேட்பாளர் நடேசன் புகார்  தெரிவித்தார். தேர்தலை முன்னிட்டு பிரச்னை ஏற்படாத வகையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cooperative Society ,election ,Tiruchengode ,
× RELATED 8 லட்சத்திற்கு பருத்தி ஏலம்