×

போச்சம்பள்ளியில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளின் சுவர்கள் இடிந்தன

போச்சம்பள்ளி, செப்.24:  போச்சம்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த கனமழையால் 3 வீடுகளில் மேற்கூரை பறந்து, சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் விடிய, விடிய தூங்காமல் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக மழையின்றி ஏரி, குளம், குட்டைகள் காய்ந்து பாலைவனம் போல் காணப்பட்டது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், போச்சம்பள்ளியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு துவங்கிய மழை, சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த மழையால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். சில இடங்களில் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரங்கள் சாய்ந்தது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மழையின் போது வீசிய காற்றுக்கு, போச்சம்பள்ளி எம்ஜிஆர் நகர், பழைய போச்சம்பள்ளி பகுதிகளில் 3 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மேலும், வீடுகளின் சுவர்களும் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், பயிர்கள் நீரில் மூழ்கின. போச்சம்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு, கொட்டி தீர்த்த கனமழையால், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: கிருஷ்ணகிரி 32.2, போச்சம்பள்ளி 90.4, பாரூர் 67, தேன்கனிகோட்டை 5, ஓசூர் 19.2, அஞ்செட்டி 1.2, பெனுகொண்டாபுரம் 13.2, சூளகிரி 9 என மொத்தம் 246.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags : houses ,Pochampally ,
× RELATED மாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்