×

அன்னவாசல் அருகே பரபரப்பு நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

புதுக்கோட்டை, செப்.24: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடியினை மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை ஆரம்ப நிலையிலேயே கடைப்பிடித்து நெற்பயிரை தாக்கும் குலைநோயினை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமெனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சி பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. இலைகளின் மேல் வெண்ணிறத்திலிருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். இந்நோய் தீவிரமாக தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது. நெற்பயிரின் கழுத்துப் பகுதியில் இந்நோய் தாக்கும்போது கறுப்பு நிறமாக மாறிக் கதிர்மணிகள் சுருங்கியும், கதிர்கள் உடைந்தும் தொங்கும்.இந்நிலையில் இது ‘கழுத்துக் குலைநோய்” எனப்படும். இந்நோய் நெற்பயிரின் கணுக்களில் தாக்கும்போது அவை கறுப்பு நிறமாக மாறி உடைந்துவிடும் நிலையானது ‘கணுக் குலைநோய்” எனப்படும். மேகமூட்டமான வானிலை, காற்றில் அதிக ஈரப்பதம், தொடர்மழையும் தூறலும் இருப்பின் குலைநோய் பரவும். அதிகமான தழைச்சத்தின் மூலமும், காற்றின் மூலமும், குலைநோயால் பாதிக்கப்பட்ட விதைகள், களைகள் ஆகியவற்றின் மூலமும் இந்நோய் பரவும்.

குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும். நோயற்ற பயிரிலிருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். நடவு வயலில் நோயற்ற நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
வயலிலும் வரப்பிலும் உள்ள களைகளை அகற்றிட வேண்டும். நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ஆடுதுறை-39, போன்ற ரகங்களை பயிரிடலாம். எளிதில் நோய் தாக்கும் சம்பா மசூரி போன்ற ரகங்களைப் பயிரிடுவதை தவிர்க்கலாம். விதை நேர்த்தி:
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எதிர் உயிர்ப் பூஞ்சணக்கொல்லியைக் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கவும் அல்லது ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டாசிம் அல்லது டிரைசைக்ளோசோல் ரசாயன பூஞ்சாணக்கொல்லி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.நடவிற்கு முன் நாற்றுகளை சூடோமோனாஸ் கரைசலில் 30 நிமிடம் ஊறவைத்து நடவு செய்யலாம். நடவு வயலில் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எதிர் உயிர்ப் பூஞ்சணத்தை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து இடவும். இந்நோய்த் தாக்குதல் அதிகமாகும்போது பூஞ்சணக்கொல்லியைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : hepatitis attack ,Annawasal ,hemp paddy ,
× RELATED அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில்...