×

சாத்தான்குளம் அருகே பெண்கள் சாலை மறியல்

சாத்தான்குளம், செப். 24: சாத்தான்குளம்  அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி  குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் அவர்களை சமரசப்படுத்தினர். சாத்தான்குளம்  அருகே இடைச்சிவிளை ஊராட்சிக்கு உட்பட்டது பூவன்கிளை கிராமம். இங்கு  கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளைக்கிணறு வாயிலாக பொதுமக்களுக்கு  குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடும் வறட்சியால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவதிக்குள்ளான கிராம மக்கள், கூடுதல் ஆழத்தில் ஆழ்துளைக்  கிணறு தோண்டி முறையாக குடிநீர் வழங்க தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து புதிய  ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டபோது அதிலும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து  முறையாக குடிநீர் வழங்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  இடைச்சிவிளையில் திசையன்விளை - உடன்குடி ரோடு சந்திப்பில் பொதுமக்கள்  திடீரென்று நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட  பெண்கள் காலி குடங்களுடன் பங்கேற்றனர்.

தகவலறிந்து விரைந்துவந்த வந்த தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், எஸ்ஐ லாரன்ஸ், பிடிஓ செல்வி, துணை தாசில்தார் சுவாமிநாதன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களை சமரசப்படுத்தினர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 24 மணி நேரத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Sathankulam ,
× RELATED பெண்களுக்கு சொத்துரிமை ஜி.கே.வாசன் வரவேற்பு