×

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, செப். 24:  கோவில்பட்டியில் மக்களுக்கு இடையூறாக இயங்கும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு எதிர்புறம் மெயின்ரோடு அருகிலும், அரசு மருத்துவமனை பகுதியிலும், கடலையூர் ரோடு அரசு மாணவர் விடுதி எதிர்புறமும், தங்கமயில் நகை கடைக்கு எதிர்புறமும் என 4 இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இவற்றால் அப்பகுதி மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதால் உடனடியாக அகற்றக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்ட பின்னர் ஆர்டிஓ விஜயாவிடம் மனு அளித்து சென்றனர். இதில் அனைத்து சமுதாய பிரதிநிதி முத்துகுமார், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத் தலைவர் செல்லத்துரை, அம்பேத்கர் சிலை பாதுகாப்பு குழு தலைவர் தாவீதராஜா, சமூக ஆர்வலர் அன்புராஜ், மாரியப்பன், பிரபாகரன், மாவீரன் பகத்சிங் ரத்ததான கழகம் ரவிப்பாண்டி, காளிதாஸ், ரமேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி புதியதமிழகம் கட்சியினர் ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமையில் ஆர்டிஓ விஜயாவிடம் மனு அளித்தனர்.

Tags : Kovilpatti RTO ,task force shops ,
× RELATED இளையரசனேந்தல் பிர்கா விவகாரம்...