×

மானூர், உக்கிரன்கோட்டை பகுதியில் பிஎஸ்என்எல் செல்போன் சிக்னல் துண்டிப்பு

மானூர், செப். 24:  மானூர் மற்றும் உக்கிரன்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில்  பிஎஸ்என்எல் செல்போன் தொடர்புகள் அவ்வப்போது துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானூர் தாலுகா உக்கிரன்கோட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைக்கப்பட்டு தரைவழி  தொலைத் தொடர்புகளும், செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு இதனை  மையமாகக் கொண்டு 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் கைப்பேசி இணைப்புகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். செல்போன் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் அனைத்து செயல்பாடுகளுக்கும் மற்றும் பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய காரணிகளாக மாறிவிட்டது. உக்கிரன்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் துண்டிக்கப்படாத செல்போன் இணைப்புகள் கொடுக்கும் வகையில் அலுவலகத்திற்குள் பேட்டரிகளுடன் கூடிய இன்வெட்டர்களும், ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் உக்கிரன்கோட்டை அலுவலகத்தில் செயல்படும் மின்கோபுரம் அவ்வப்போது செயலிழந்து பல மணி நேரங்கள், சிக்னல் துண்டிக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியை சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே பிஎஸ்என்எல் நிர்வாகம், செல்போன் டவர்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அநேக வாடிக்கையாளர்கள் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு திரும்பும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் கோபுரங்களுக்கு மின்வாரியம் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
மின்சாரம் இல்லாத நேரங்களில் கோபுரம் தொடர்ந்து செயல்பட பேட்டரிகள் அடங்கிய இன்வெட்டர் பொருத்தப்பட்டிருந்தும் அவைகள் காலாவதியாகிய நிலையில் உள்ளன. இதற்கென பொருத்தப்பட்ட ஜெனரேட்டருக்கும் எரிபொருள் இல்லாமல்  நிறுத்தப்பட்டுள்ளன. எனவே எப்போதெல்லாம் மின்வாரியத்தின் மின்இணைப்பு உள்ளதோ அப்போது மட்டுமே செயல்படும் என தெரிவித்தனர்.

Tags : BSNL ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு