×

5 வகுப்புகளுக்கு 2 ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்த முடியும்? கரூர் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் நிர்வாகி சூடான கேள்வி

கரூர், செப். 24: 2 ஆசிரியர்கள் எப்படி 5 வகுப்புகளுக்கு பாடம் எடுக்க முடியும் என கல்வித்துறை அமைச்சருக்கு ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்டம் சார்பில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. முன்னாள் மாநில தலைவர் மோசஸ், துணைபொதுசெயலாளர் கணேசன், துணைதலைவர் ரகீம், காளிதாஸ், ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். பின்னர் மோசஸ் நிருபர்களிடம் கூறியது:
மாணவர்களின் நலனுக்காக இந்த பிரசாரத்தை முன் எடுத்துள்ளோம். அரசு வழங்க வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடி பென்ஷன் நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளன. ஆனாலும் பள்ளிகளை மூடக்கூடாது. மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும் என போராடுகிறோம். மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை வரைவு திட்டத்தை அறிவித்து அதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் கொல்லைப்புறமாக மாநில அரசு பல அரசாணைகளை வெளியிட்டு ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசத்தை காட்டி வருகிறது. எந்த மாநிலமும் அமல்படுத்த முன்வராத நிலையில் அதை செயல்படுத்தும் பினாமி அரசாக இருக்கிறது. 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் என்று தான் கூறியிருக்கிறார். தேர்வு என்பது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை. மத்திய அரசுக்கு மண்டியிட்டு செயல்படுவதை காட்டுகிறது.

தமிழகத்தில் 18 ஆயிரம் ஈராசிரியர் அரசு பள்ளிகள் உள்ளன. இதனை மூட திட்டமிட்டு அருகிலேயே தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். 2 ஆசிரியர்களால் எப்படி 5 வகுப்புகளுக்கு பாடம் எடுக்க முடியும் என்பதை கல்வி அமைச்சர் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனம் கடந்த 9 ஆண்டாக இல்லை. 90 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். கட்டமைப்புகளை மேம்படுத்தி அரசு பள்ளிகளையும் மாணவர்களையும் காப்பாற்ற வேண்டும். பள்ளிகளை மூடக் கூடாது. மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 28ம் தேதி கரூர் மாவட்டத்தில் தெருமுனை பிரசாரம், 29ம் தேதி பிரசார நிறைவில் மாநில அளவிலான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கல்வியாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Teachers ,classes ,administrator ,Karur Primary School Teacher Alliance ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...