×

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை கிடுகிடு உயர்வு

பாவூர்சத்திரம், செப். 24:  பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால்  பல்லாரி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.100யை எட்டுமென மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு மிகவும் பிரசித்திப் பெற்ற பகுதி கீழப்பாவூர் ஒன்றியம். இங்குள்ள கீழப்பாவூர், மேலப்பாவூர் குளங்களுக்கு சிற்றாறு கால்வாய் மூலம் நீர்வரத்து வந்து தண்ணீர் பெருக்கும். இந்த குளங்கள் மூலம் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, குலசேகரப்பட்டி, மேலப்பாவூர், சடையப்புரம், கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், மகிழ், அருணாப்பேரி, நாகல்குளம், மேலபட்டமுடையார்புரம் போன்ற பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திப்பணம்பட்டி, கல்லூரணி, சிவநாடானூர், நாட்டார்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், சென்சென்தாபுதுக்குளம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், ஜம்புநதி கால்வாய் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை போக்கு காட்டியதால் குளங்களில் தண்ணீரின்றியும், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததாலும் நிலங்களை தரிசாக விட்டனர்.

இந்நிலையில் போர்வெல் போட்டு அதன் மூலம் கிடைத்த தண்ணீரை கொண்டு பல்லாரி, சிறிய வெங்காயம், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், அவரைக்காய்,  உள்ளிட்ட சில காய்கறிகளை பயிரிட்டு விற்பனைக்காக பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.
தற்போது மழை பெய்து கீழப்பாவூர், மேலப்பாவூர் குளங்களில் தண்ணீர் பெருகினாலும் பல்லாரி விளைச்சலின்போது போதிய தண்ணீர் கிடைக்காததால் மகசூல் குறைந்து உள்ளது. இதன் காரணமாக பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு பல்லாரி வரத்து குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தரம்வாரியாக ரூ.10 முதல் 20 வரை விற்கப்பட்ட பல்லாரி விலை, கடந்த இரு நாட்களாக ரூ.40 முதல் 47 வரை விலைபோனது.
வழக்கமாக தேவை அதிகமாக இருந்தால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து மரபணு மாற்றப்பட்ட பல்லாரியை மொத்த வியாபாரிகள் இறக்குமதி செய்வர்.

ஆனால் கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிராவிலும் கனமழை பெய்ததால் பல்லாரி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கிருந்தும் வரத்து தடைபட்டு புனே பல்லாரியும் கிலோ ரூ.50 முதல் 55 வரை விற்பனையாகிறது. வரும் நாட்களில் உள்ளூரில் இருந்து   பல்லாரி வரத்து மேலும் குறைய     தொடங்கினால் கிலோ ரூ.100 வரை விற்பனையாகும் என பல்லாரி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : price hike ,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு: வீடியோ வைரல்