×

ஆம்பூரில் வீட்டின் முன் விளையாடிய குழந்தையை கடத்த முயன்ற பெண்ணுக்கு சரமாரி அடி, உதை ஆந்திர கடத்தல் கும்பலுடன் தொடர்பா?

ஆம்பூர், செப்.24: ஆம்பூரில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கடத்தி செல்ல முயன்ற பெண்ணை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ஆனால் பொதுமக்கள் பிடியில் இருந்து அந்த பெண், குழ்நதையை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர். இவரது ஒரு வயது ஆண் குழந்தை நேற்று காலை வீட்டின் வெளியே தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது காலை 8.40 மணியளவில் குழந்தையின் தாய் வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
அப்போது ஒரு பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ‘குழந்தையை கடத்தி செல்கிறாள், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என கூச்சலிட்டார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணை விரட்டி சென்றனர். உடனே அந்த பெண், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.

ஆனால் பொதுமக்கள் விரட்டி சென்று, அந்த பெண்ணை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உடனே அந்த பெண், பொதுமக்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் வீட்டிற்கு முன் விளையாடிய ஒரு வயது சிறுவன் திடீரென காணவில்லை. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

அதேபோல் நேற்று வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, பெண் கடத்தி செல்ல முயன்றுள்ளார். எனவே நரியம்பட்டு பகுதியை சேர்ந்த குழந்தையையும் இந்த பெண்ணே கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பிய பெண் தெலுங்கு மொழியில் பேசியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அந்த பெண்ணுக்கும், ஆந்திராவை சேர்ந்த குழந்தைகள் கடத்தல் கும்பலுக்கும் ெதாடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் குழந்தையை கடத்தி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : house ,Ambur ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...