×

புழல் சிறை கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

சென்னை: புழல் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அதிரடி சோதனையில் கைதிகளிடம் இருந்து 2 செல்போன்கள், சார்ஜர், சிம்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. புழல் சிறைச்சாலையில் விசாரணை பிரிவு, தண்டனை பிரிவு மற்றும் மகளிர் சிறை ஆகியவை உள்ளன. இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, சுமார் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள தண்டனை பிரிவில், சிலர் செல்போன் பயன்படுத்தி வருவதாக நேற்று முன்தினம் சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், புழல் சிறையில் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது, ஆயுள் சிறை கைதியான கன்னியாகுமரியை சேர்ந்த கேப்ரியல் (50), தர்மபுரியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (54) ஆகிய இருவரும் கழிவறையில் ஒளிந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தது தெரிந்தது. அவர்களை சிறைக்காவலர்கள் கையும் களவுமாக பிடித்து, அவர்கள் வைத்திருந்த 2 செல்போன், சார்ஜர்கள், பேட்டரிகள், சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புழல் போலீசில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறைச்சாலையில் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தும், கைதிகளுக்கு செல்போன் எப்படி செல்கிறது என விசாரித்து வருகின்றனர்.

Tags : prisoners ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்