×

சிட்லபாக்கம் பேரூராட்சி தெருக்கள் முழுவதும் குப்பை குவியல் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் அதிகாரிகள்

தாம்பரம்: சிட்லபாக்கம் பேரூராட்சியில் சரிவர துப்புரவு பணி நடைபெறாததால், அனைத்து தெருக்களிலும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்கள் மர்மகாய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீப காலமாக பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணி மேற்கொள்ளாததால், அனைத்து தெருக்களிலும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே மரக்கிளைகள், கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை குவிந்து கிடப்பதால், இதிலிருந்து கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. தற்போது, அடிக்கடி மழை பெய்து வருவதால் தெருக்களில் குவிந்து இருக்கும் குப்பைகளில் மழைநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், இங்குள்ள மழைநீர் கால்வாய்கள் மீது பலர் கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளதால், அவற்றை தூர்வாரி, பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அடைப்பு ஏற்பட்டு மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல், குடியிருப்பு பகுதியை சூழ்ந்து விடுகிறது.
தற்போது, தெருக்களில் உள்ள குப்பை கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே, துப்புரவு பணியை முறையாக மேற்கொண்டு, தெருக்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும், என இப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘துப்புரவு பணிக்காக ஆண்டுதோறும் பல லட்சம் செலவிடும் பேரூராட்சி நிர்வாகம், சரிவர குப்பைகளை அகற்றுவதே இல்லை. இதனால், தெருக்கள் முழுவதும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இவற்றில் கொசு உற்பத்தி அதிகரித்து பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இங்குள்ள பலர் தெருக்களை ஆக்கிரமித்து கட்டுமான பணி மேற்கொண்டு வருகின்றனர். செங்கல், ஜல்லி, மணல், கம்பிகள், மரக்கம்புகள் உள்ளிட்டவற்றை சாலையிலேயே வைத்துள்ளதால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறு சாலையில் கட்டுமான பொருட்களை வைத்துள்ளவர்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு அமைதியாக உள்ளனர். தற்போது, மழைக்காலம் என்பதால் சாலையில் தேங்கியுள்ள குப்பையுடன் மழைநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்கள் மர்ம காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி, முறையாக துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

திறந்தநிலை கால்வாய்:  சிட்லபாக்கம் ஜட்ஜ் காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 2வது பிரதான சாலையில் 800 அடி நீளமும், 15அடி அகலமும் கொண்ட கால்வாய் உள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மருத்துவமனை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த கால்வாய் வழியாக சென்று சிட்லபாக்கம் ஏரியில் கலக்கிறது. இந்த கால்வாய் சாலை மட்டத்தில் இருப்பதால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மற்றும் அங்கு விளையாடும் சிறுவர்கள் கால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது. மேலும், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருவில் தேங்குகிறது. எனவே அந்த கால்வாய் மீது கான்கிரீட் சிலாப் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 30 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அகற்றப்படாத கட்டிட கழிவுகள்

சிட்லபாக்கத்தில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது இரண்டு கட்டிட வேலைகள் நடைபெறுகிறது. இங்கு இடிக்கப்படும் கட்டிட கழிவுகளை தெருக்களில் குவித்து வைக்கின்றனர். கட்டுமான பணி முடிந்த பின்னரும் அந்த கட்டிட கழிவுகளை அகற்றுவதில்லை. குறிப்பாக நடராஜன் தெரு, ஓம் தெரு, ஜட்ஜ் காலனி 1, 2வது பிரதான சாலை, 3, 4வது தெருக்கள் என பல இடங்களில் மாதக்கணக்கில் கட்டிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.  இதுபோன்று கட்டிட கழிவுகளை தெருவில் குவித்து வைப்பவர்களை பேரூராட்சி அதிகாரிகள் கண்டித்து, அந்த கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் பேரூராட்சி அதிகாரிகள் அவ்வாறு செய்வதில்லை. மேலும், இந்த கட்டிட கழிவுகள் தெருவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் தான் குப்பை லாரி தெருக்கள் உள்ளே வர முடியாமல், குப்பைகளை அகற்ற முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

Tags : streets ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...