×

காவிரி டெல்டாவில் சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்

தஞ்சை, செப்.24: தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ.சுரேஷ் தலைமை வகித்தார். அப்போது விவசாயிகள் பேசும்போது, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட துணை செயலாளர் நடுப்படுகை சுகுமாரன் பேசும்போது, வறட்சியின் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயம் செய்ய இயலாத சூழ்நிலையை கருதி கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை குறுகிய காலக்கடன்களை, மத்திய கால கடன்களாக மாற்றம் செய்து பயிர்க்கடன் பெற்ற அனைவருக்கும் புதிய பயிர்க்கடன் வழங்க அரசாணை வெளியிட்டது. ஆனால் எந்த வங்கியும் கூட்டுறவு கடன் சங்கமும் இந்த அரசாணையின்படி விவசாயிகளுக்கு கடன் வழங்கவில்லை. தமிழக அரசின் அரசாணைபடி தஞ்சை மாவட்டத்தில் விவசாய பயிர்கடன் வழங்கப்படவில்லை. எனவே அரசாணையின்படி விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே வடக்குதெரு நாகாச்சி கோவிந்தராஜன் பேசும்போது, பூதலூர் தாலுகா அலுவலகம் தினமும் காலை 10.15 மணிக்கே திறக்கப்படுகிறது. அலுவலர்கள் 10.30 மணி முதல் 11 மணி வரை அலுவலகம் வருகின்றனர்.

புரோக்கர்கள் மூலம் தவறான முறையில் பண வசூல் நடக்கிறது. வாங்கும் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கப்படுவதில்லை. மனுக்களை காணவில்லை என கூறிவிடுகின்றனர். எனவே ஆர்.டி.ஓ. இப்பிரச்னையில் தலையிட்டு பூதலூர் அலுவலகம் முறையாக எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் அமையகரம் ரவிச்சந்தர் பேசும்போது, நெல்லுக்கான ஆதரவு விலையை மத்திய அரசு 0.65 காசு உயர்த்தி பல மாதமாகியும் மாநில அரசு ஆதார விலையையோ, போனசையோ அறிவிக்கவில்லை. எனவே உடனடியாக நெல்லுக்கான ஆதாத விலையை உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வேண்டும். குவிண்டாலுக்கு ரூ.500 உயர்த்தி வழங்கி தேவையான இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 3 சதவீத வட்டி சலுகையில் விவசாயத்திற்கு கடன் வழங்குவதை நிறுத்த கூடாது. அப்படி நிறுத்தினால் விவசாயம் பொய்த்துபோகும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே தொடர்ந்து விவசாயிகளுக்கு நகை கடன் வழங்க வேண்டும். சம்பா தொகுப்பு திட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.

Tags : Samba ,Cauvery Delta ,
× RELATED தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம்