×

கும்பகோணம் சாந்திநகரில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பால் சாலையில் ஓடும் கழிவுநீர்

கும்பகோணம், செப்.24: கும்பகோணம் சாந்திநகரில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைப்பால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு சாந்தி நகரில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அனைவரும் வேலைக்கு செல்பவர்களாகவும், வணிக நிறுவனங்களும், மருத்துவமனைகள், வாகன பழுதுபார்க்கும் பட்டறைகள் உள்ளன.
இந்நிலையில் சாந்தி நகரில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைத்து கொண்டு லேசாக கழிவு நீர் வெளியேறி வந்தது. பின்னர் இரவு நேரங்களில் தொடர் மழையினால், பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் அடைத்து கொண்டு, அங்குள்ள மேன்ஹோல்களில் கழிவு நீர் ஆறாக ஒடியது. இது குறித்து அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். மேலும் அங்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள், பணம் கொடுத்தால் தான் சுத்தம் செய்வோம் என்று கூறி விட்டு சென்று விட்டனர்.
இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பல்வேறு காய்ச்சல் மற்றும் மர்ம நோய்கள் வருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாந்தி நகரில் ஆறாக ஓடும் கழிவு நீரை சுத்த செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் செய்வோம் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிவசாமி கூறுகையில், சாந்தி நகரிலுள்ள மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், வாகன பட்டறைகளில் உள்ள கழிவுகள் அனைத்து சேர்ந்து பாதாள சாக்கடை குழாயில் அடைத்து கொண்டுள்ளது. இதனால் மேன்ஹோலில் இருந்து கழிவு நீர் ஆறாக ஒடுகிறது. இதனால் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால்,சாந்தி நகரில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கடந்த சில நாட்களாக கழிவு நீர் சாலையில் ஓடுவதால், அதில் புழுக்கள், கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது. இதனால் அங்கு குடியிருப்பவர்களும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும் பல்வேறு நோய்கள் வருவதற்கும், மர்ம காய்ச்சல் வருவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாந்தி நகரில் பாதாள சாக்கடை மேன்ஹோலை சீர் செய்யா விட்டால், அப்பகுதியினர் திரட்டி, நகராட்சி அலுவலகத்தை முற்று செய்வோம் என்றார்.

Tags : Kumbakonam Shantinagar ,
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...