×

காரைக்கால்-பேரளம் அகல ரயில்பாதை திட்டத்தை 2020க்குள் முடிக்க வலியுறுத்துவேன்

காரைக்கால், செப்.24: வரும் 2020 டிசம்பருக்குள் காரைக்கால்&பேரளம் அகல ரயில்பாதை திட்டத்தை, விரைவாக நிறைவேற்ற ரயில்வே துறையிடம் வலியுறுத்தி பேசியுள்ளேன் என, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன், புதுடெல்லியில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டார். கூட்ட முடிவில், மத்திய ரயில்வே பொறியியல் இயக்குனர் விஸ்வேஷ் சௌபே மற்றும் பல்வேறு துறை செயலர்கள், இயக்குனர்களை நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காரைக்கால் திரும்பினார்.

காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பல்வேறு துறைகளின் செயலர்கள், இயக்குநர்களை சந்தித்தபோது, புதுச்சேரியில் பாகூர், காரைக்காலில் திருநள்ளாறு ரூர்பன் திட்டத்தில் சேர்க்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. வருமாண்டு புதுச்சேரியில் வில்லியனூர், காரைக்காலில் நிரவி- திருப்பட்டினத்தை சேர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் 15 ஆயிரம் வீடுகளில் மாடியில் சோலார் பிளாண்ட் அமைப்புக்கான அறிவிப்பை அரசு செய்துள்ளது. இதற்கு துறை ரீதியிலான உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உருவாக்கத்துக்குப் போதுமான நிதியுதவி தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆழ்குழாய் நீர் பெற சூரிய மின்சக்தி திட்டத்தில், மத்திய அரசு 30 சதவீதமும், மாநில அரசு 30 சதவீதமும், விவசாயி 40 சதவீதமும் என்கிற பங்களிப்புத் திட்டம் உள்ளது. இதற்கு போதிய ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை செயலரிடம் பேசியபோது, இந்தத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.2 கோடி தேவை எனவும், தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. முக்கியமாக, ரயில்வே பொறியியல் துறை இயக்குனரை சந்தித்து, திட்டப்பணிகள் குறித்துப் பேசப்பட்டது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக திட்டம் நிறைவேறினால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இயக்குனரும் ஏற்று விரைந்து செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார் என்றார்.

Tags : completion ,Karaikal-Peralam ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா