×

பைக்கால் போலீசார் மீது மோதல் வாலிபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு

நாகர்கோவில், செப். 24: நாகர்கோவில் போக்குவரத்துபிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் செட்டிகுளம் ஜங்ஷனில் நேற்று முன்தினம் மாலை வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுமார் 20 வயது மதிக்கதக்க ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் வேகமாக வந்துள்ளார். அப்போது அவரை போலீஸ்காரர் லிபின் என்ற வில்லியம்(32) நிறுத்த முயன்றார். வேகமாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவாறு, பைக்கால் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதில் நிலை தடுமாறி போலீஸ்காரர் லிபின் கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த லிபினை, இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் மீட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று திரும்பினார். இது குறித்து லிபின் கோட்டார் போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை என்பதால் செட்டிகுளம் ஜங்சன் பகுதியில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அந்த கடையில் இருந்து கண்காணிப்பு கேமராவை கொண்டு கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சிவப்பு காலர் சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் பைக்கில் வேகமாக வந்து போலீசார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று இருப்பது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த பைக்கின் நம்பர் கண்காணிப்பு கேமராவில் சரியாக தெரியவில்லை. நேற்று செட்டிகுளம் ஜங்ஷனில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த வாலிபரின் பைக் நம்பர் பதிவாகி இருக்கிறதா? என கோட்டார் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கண்காணிப்பு கேமராவில் பைக் நம்பர் விவரம் பதிவாகவில்ைல. இதனால் போலீசார் மீது மோதிய வாலிபர் யார் என கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசார் மீது பைக்கால் மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாலிபர் மீது கொலை முயற்சி, தகாதவார்த்தையால் திட்டுதல், அரசு வேலை செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Baikal ,murder ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...