×

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி விக்ரகங்கள் பவனி 26ல் புறப்படுகிறது

தக்கலை, செப். 24: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மனாபபுரத்தில் இருந்து 3 சாமி விக்ரகங்கள் செல்லும் நிகழ்ச்சி 26ம் தேதி அரண்மனையில் நடக்கிறது. திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழா தமிழகமும், கேரளமும் கைகுலுக்கும் விழாவாக கருதப்படுகிறது. முன்னர் வேணாட்டின் தலைநகராக பத்மனாபபுரம் இருந்த போது இங்குள்ள அரண்மனையில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. தலைநகர் 1795ல் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் மட்டுமே இங்கு நடந்து வந்த விழா பின்னர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக குமரியில் இருந்து 3 சாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று வருவது காலங்காலமாக நடந்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள நவராத்தி பூஜையில் பங்கேற்க சுவாமி விக்ரகங்களின் பவனி பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து 26ம் தேதி தொடங்குகிறது. இதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் பல்லக்குகளில் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி கோவிலுக்கு 26ம் தேதி காலை வந்தடைகின்றனர். பின்னர் பவனியின் முன்னே கொண்டு செல்லும் பூஜையில் வைக்கப்பட்டிருந்த மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனையின் உப்பரிகை மாளிகையில் கேரள போலீசார் மரியாதை செலுத்துதலுடன் நடைபெறும்.

அப்போது தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவியின் அனுமதி பெற்ற ேகாவில் ஊழியர் சுருள் வழங்குவார். இதையடுத்து அங்கு பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும் உடைவாளை அரண்மனை அலுவலர் எடுத்து கேரள தொல்லியல் துறை இயக்குநரிடம் வழங்க அதனை கேரள அமைச்சர்கள் பெற்றுக் கொண்டு குமரி மாவட்ட தேவசம் போர்டு இணை ஆணையரிடம் வழங்குவார். அதனை பவனியின் முன் கொண்டு செல்லும் தேவசம் ஊழியர் பெற்றுக் கொண்டதும் சரஸ்வதிதேவி கோவில் வந்தடைகின்றனர். அங்கு சரஸ்வதி தேவிக்கு தீபாராதனை காட்டப்பட்டு யானை மீது அமர்த்தப்படுகிறார். தொடர்ந்து அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கி அரண்மனை வந்தடையும். அங்கு அரண்மனை நிர்வாகம் சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுவதுடன் கேரள போலீசாரின் வாத்திய இசைகளுடன் கூடிய மரியாதை செலுத்துதலையடுத்து பிடி காணிக்கை வழங்குதல் உள்ளிட்ட சடங்குகள் முடிவடைந்த பிறகு பவனி கேரளாவுக்கு புறப்படும்.

இந்நிகழ்ச்சியில் கேரள கலாசாரத்துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன், தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், எம்.பி., வசந்தகுமார், எம்எல்ஏக்கள் மனோதங்கராஜ், ஹரீந்திரன், ஆன்சலன், மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து வழி நெடுகிலும் சுவாமிகளுக்கு பக்தர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய கேரள போலீசார் மற்றும் தமிழக போலீசார் செல்கின்றனர். பவனியானது மேட்டுக்கடை, கேரளபுரம், திருவிதாங்கோடு வழியாக செல்லும் சாமி விக்ரகங்கள் இரவு குழித்துறை மகாதேவர் கோவில் சென்றடைகிறது. 27ம் தேதி குழித்துறையில் இருந்து மீண்டும் புறப்படும் பவனிக்கு குமரி, கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் செண்டைமேளம், பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்படும். இரவு நெய்யாற்றின் கரை சென்றடைகிறது.

28ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. இதில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், கரமனையில் வைத்து குமாரசுவாமி வெள்ளிக்குதிரையில் அமர்ந்து ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவிலிலும் பூஜையில் வைக்கப்படுகிறது. சாமி விக்ரகங்கள் 29ம் தேதி முதல் நவராத்திரி பூஜையில் 10 நாட்கள் பங்கேற்கிறது. பூஜை முடிந்த பிறகு ஒரு நாள் நல்லிருப்பை அடுத்து 10ம் தேதி புறப்பட்டு 12ம் தேதி பத்மனாபபுரம் வந்தடைகிறது.

Tags : Navarathri Festival ,Thiruvananthapuram ,Padmanabapuram Palace ,
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...