×

கோட்டார் ஆயுர்வேத மருத்துவகல்லூரியில் பெண் நோயாளி திடீர் தர்ணா

நாகர்கோவில், செப். 24: கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் நேற்று பெண் நோயாளி திடீர் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் குமரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவ்வாறு சென்னை தி.நகரை சேர்ந்த செல்வம் மனைவி மலர்கொடி(48). கடந்த 25 நாட்களுக்கு முன் வாத நோய் சிகிச்சைக்காக வந்தார். அவர் மருத்துவமனை கட்டிடத்தின் 2வது மாடியில் உள்ள பெண்கள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் படுக்கையில் இருந்தபடியே உடை மாற்றுவதாகவும், போதகர் ஒருவர் வந்து அவருக்காக சத்தமாக ஜெபம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகள் டாக்டர்களிடம் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஆய்வுக்கு வந்த டாக்டர்களிடம் மலர்கொடி இடையூறாக இருப்பதாக மீண்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து டாக்டர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்து வெளியே செல்லும்படி கூறினர். வெளியே வந்த மலர்கொடி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நான் சென்னையில் வாதநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தபோது, கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் படித்த ஒருவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு செல்லுமாறு கூறினார். அதன்படி நான் இங்கு வந்தேன். 25 நாட்கள் சிகிச்சை பெற்றேன். எனது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடக்க முடியாததால், எனது ஆடையை படுக்கையில் இருந்தவாறு மாற்றுவேன்.

மேலும் சென்னையில் நான் செல்லும் கிறிஸ்தவ சபை போதகர், இங்குள்ள போதருக்கு ெதரிவித்துள்ளார். அதன்படி அந்த போதகர் வந்த நோய் குணமாக வேண்டி ஜெபம் செய்தார். இந்நிலையில் என்னை மருத்துமனையில் இருந்து வெளியே செல்லுமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டும் என்றால் மன்னிப்பு கடிதம் தருமாறு கூறினர். நான் என்ன தவறு செய்தேன் என தெரியவில்ைல. இவ்வாறு அவர் கூறினார்.
பெண் நோயாளி தர்ணா போராட்டம் நடத்தி வரும் தகவல் அறிந்து வந்த டீன் டாக்டர் கிளாரன்ஸ்டேவி அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிகிச்சையில் இருக்கும் காலத்தில் மருத்துவமனை விதிமுறைகளுக்கு உள்பட்டு நடக்க வேண்டும். பிற நோயாளிகளுக்கு இடையூறாக எந்த செயலும் செய்யக்கூடாது என அந்த பெண்ணிடம் கூறினார். மேலும் அந்த பெண் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற கல்லூரி டீன் கிளாரன்ஸ்டேவி நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : patient ,Kotar Ayurvedic Medical College ,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...