×

குமரியில் பல்லாரி, பூண்டு விலை கிடுகிடு உயர்வு ஓட்டல்களில் வெங்காயவடை ‘கட்’

நாகர்கோவில், செப். 24: தமிழகத்திற்கு மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாரி விற்பனைக்கு வருகிறது. வடமாநிலத்தில் பலத்த மழையால் பல்லாரி உற்பத்தி அடியோடு பாதிப்படைந்தது. இதனால் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பல்லாரிகள் தற்போது விற்பனைக்கு வருகிறது. குமரியில் உள்ள கோட்டார் மார்க்கெட்டிற்கும் பல்லாரிகள் லாரி கணக்கில் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 கிலோ எடை கொண்ட பல்லாரி 1300க்கு விற்பனைக்கு வந்தது. அப்போது மொத்த விலைக்கு 26 முதல் 28க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலைக்கு 30 முதல் 35 வரை விற்பனையானது. அதன்பிறகு பல்லாரி விலை படிப்படியாக உயர்ந்து இன்று 50 கிலோ மூடை 2500க்கு விற்பனையாகிறது. இதனால் மொத்த விலைக்கு கிலோ 50க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் சில்லரைக்கு 55 முதல் 60க்கு விற்பனையாகி வருகிறது. பல்லாரி விலை உயர்வால் ஓட்டல்களில் வெங்காயவடை, தயிர் வெங்காயம் போன்றவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வடமாநிலங்களில் பல்லாரி இருப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுவதால், குமரி மாவட்டத்திலும் பல்லாரி விலை உயரும் என கூறப்படுகிறது. மத்தியபிரதேசத்தில் இருந்து வெள்ளைபூண்டு கோட்டாருக்கு வருகிறது. மழையால் வெள்ளைபூண்டும் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளைபூண்டு 80 முதல் 100க்கு விற்பனையானது. தற்போது படிப்படியாக விலை உயர்ந்து வெள்ளைபூண்டு கிலோ 200க்கு விற்பனையாகி வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் தரத்திற்கு ஏற்ப வெள்ளைபூண்டு 120, 140, 160 என விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து பல்லாரி வியாபாரி காமராஜ் கூறியதாவது: கோட்டார் மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாரி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 25க்கு விற்பனைக்கு வந்தது. தற்போது கிலோ ₹50க்கு விற்பனைக்கு வருகிறது. விலை உயர்வால் ஓட்டல்களில் பல்லாரி பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் பல்லாரிகள் வாங்குவது குறைந்துள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் பல்லாரிக்கான தேவைகள் குறைந்துள்ளதால், மேலும் பல்லாரி விலை உயரவாய்ப்பு இல்லை. இதுபோல் சின்னவெங்காயம் விலையும் உயர்ந்து வருகிறது. சின்னவெங்காயம் மொத்த விலைக்கு 40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உருளை கிழங்கு மொத்த விலைக்கு 18க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலைக்கு 20 முதல் 28 விரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Tags : Palmyra ,Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...