×

நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகர்கோவில், செப்.24: குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில முதல்வர்கள் தண்ணீர் பிரச்னை சம்பந்தமாக சந்தித்து பேச இருக்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இரு மாநிலத்தில் இருக்க கூடிய தண்ணீர் பிரச்னை பற்றி பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாறு இடதுகரை சானல் பற்றிய எந்த தகவலும் இல்லை. தமிழ்நாடு, கேரள மாநிலங்களும் சேர்ந்து 1958ம் ஆண்டு தண்ணீர் பிரச்னை சம்பந்தமாக ஒப்பந்தம் போடப்பட்டு 1965ம் ஆண்டு முதல் 2 கன அடி தண்ணீரை திறந்து குமரி மாவட்டத்திற்கு 2004ம் ஆண்டு வரை தந்தார்கள். மேலும் நெய்யாறு இடதுகரை சானல் வழியாக கேரள மாநிலத்தில் இருந்து குமரி மாவட்ட எல்லை வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலமாக 3725 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயிகள் பயன் பெற்று வந்தனர்.

இந்த தண்ணீர் வருவதின் மூலம் 1926 ஹெக்டர் நேரடி பாசனம், 563 ஹெக்டர் குளத்து பாசனம், 167 ஹெக்டர் சிறிய குளத்து பாசனம் மூலமாக விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். அப்படிப்பட்ட நிலையில் 2004ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி இருக்க கூடிய காலத்தில் தண்ணீர் திறந்துவிடுவதை கேரள மாநில அரசாங்கம் தடை செய்தது. தண்ணீர் திறந்துவிட வேண்டி தொடர்ந்து குமரி மாவட்ட திமுக சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் கேரள மாநில அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. தமிழக அரசும், கேரள மாநில அரசும் குமரி மாவட்ட விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் இருந்து வருவது விவசாயிகள் மத்தியில் ெபரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே குமரி மாவட்ட விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு மாநில அரசு உடனடியாக கேரள அரசோடு பேசி நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று இந்த அரசை திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நித்திரவிளை அருகே வீட்டின் மீது சாய்ந்த தென்னை மரம்