×

தேசிய நெடுஞ்சாலையில் 56 கி.மீ தூரம் ‘பேட்ச்-ஒர்க்’ பணிகள் தொடக்கம்

நாகர்கோவில், செப்.24: பழுதடைந்து போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக இருந்து வருகின்ற காவல்கிணறு-களியக்காவிளை சாலையில் சுமார் 56 கி.மீ தூரத்திற்கு ‘பேட்ச் ஒர்க்’ பணிகள் தொடங்கின. குமரி மாவட்டத்தில் காவல்கிணறு - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம், சுங்கான்கடை, தக்கலை உட்பட பல இடங்களில் சாலை பழுதடைந்து குண்டு, குழிகளுடன் காணப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வாகன பயணம் என்பது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ெபரும் சவாலாக இருந்து வரும் அளவிற்கு சாலை மோசமடைந்துள்ளது. மழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிப்பதால் வாகனங்களில் செல்ல பெரும் சிரமம் ஏற்படுவதுடன் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்ைக எடுக்க கேட்டு பொதுமக்கள் தரப்பில் வசந்தகுமார் எம்.பி.யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். சாலையை முழுமையாக சீரமைக்க டென்டர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு முன்னதாக பேட்ச் ஒர்க் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தநிலையில் காவல்கிணறு - களியக்காவிளை சாலையில் ‘பேட்ச்-ஒர்க்’ பணிகள் நேற்று தொடங்கின. முதற்கட்டமாக பார்வதிபுரத்தில் ‘பேட்ச்-ஒர்க்’ பணிகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலையில் சுமார் 56 கி.மீ தூரத்துக்கு ‘பேட்ச்-ஒர்க்’ செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சென்னையிலிருந்து மதுரை சென்ற 56 வயது பெண்ணுக்கு கொரோனா