×

தச்சூர் - சித்தூர் ஆறு வழிச்சாலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், செப்.24: தச்சூர் முதல் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்களை அமைப்பதற்கு சட்டப்படி தரை வாடகை வழங்கக்கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ,128 கி.மீட்டர் தூரம் ஆறு வழிச் சாலை அமைக்க, ரூ.3 ஆயிரம் கோடி திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், மூன்று போகம் விளையக்கூடிய 900 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கிறது.வனப்பகுதிக்கு உட்பட 80 ஏக்கர் நிலங்கள் பாதிக்கிறது. இதற்கு, கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஊத்துக்கோட்டையில் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை போலீசார் மிரட்டிய சம்பவமும் நடந்துள்ளது.

இந்நிலையில் விளைநிலங்களையும், நீர் நிலைகளையும் அழிக்கும் ஆறு வழிச்சாலையை திட்டத்தை கைவிட்டு, ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை முதல் ரேணிகுண்டா வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும். மேலும் விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட்டுவிட்டு சாலை ஓரங்களில் பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும்.காலாவதியான இந்திய தந்தி சட்டம் 1885ன்படி விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு பேரணியாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றவர்களை போலீசார் தடுத்தனர். தடையை மீறி உள்ளே சென்ற விவசாயிகள் கலெக்டர் அலுவகத்தை முற்றுகையிட்டனர்.  பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமியிடம் மனுக்களை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.சம்பத், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் பி.துளசிநாராயணன், பொருளாளர் சி.பெருமாள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : office ,Collector ,river route ,Thachur - Chittoor ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...