×

ஜிப்மர் வளாகத்தில் நடைபயிற்சி செல்ல திடீர் தடை

புதுச்சேரி, செப். 24:புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் வெளிநபர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு திடீர் தடை போடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக நடைபயிற்சி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு நோய்களுக்கு மல்டி ஸ்பெஷாலிட்டி வசதியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். அதேபோல இந்தியா முழுவதிலும் இருந்து மாணவர்கள் மருத்துவம் பயில வருகின்றனர். 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இம்மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளன. மேலும் இவ்வளாகத்தில் பூங்கா, சமூக நலக்கூடம், விளையாட்டு மைதானம், ஆடிட்டோரியம், கேந்திர வித்யாலயா பள்ளி, வங்கி உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் மருத்துவமனை வளாகம் ஒரு நகரம் போலவே இயங்கி வருகிறது.

மேலும் ஜிப்மர் வளாகம் மரங்கள் நிறைந்து ஒரு இயற்கையான சூழலுடன் விளங்குவதால் இங்கு பல்வேறு தரப்பினர் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் மருத்துவர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மட்டுமின்றி வெளிநபர்களும் அதிகளவில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஜிப்மர் வளாகத்தில் வெளிநபர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு திடீர் தடை போடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக நடைபயிற்சி வருபவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:புதுச்சேரியில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் குறைவாகவே உள்ளது. எனவே இயற்கையான சூழலுடன் வாகனங்கள் இரைச்சலின்றி அமைதியாக காணப்படும் ஜிப்மர் வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டோம். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை இதனால் பயனடைந்து வந்தோம். இந்நிலையில் திடீரென இங்கு நடைபயிற்சி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. நுழைவுவாயிலிலேயே செக்யூரிட்டிகள் தடுத்து அனுப்புகிறார்கள். இதனால் நாங்கள் எங்கு நடைபயிற்சி செல்வது என தெரியவில்லை. எனவே, நாங்கள் மீண்டும் நடைபயிற்சி செல்ல ஜிப்மர் நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.பாக்ஸ் நடைபயிற்சிக்கே தடையா? ஜிப்மர் மருத்துவமனையில் சமூக மருத்துவம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் நோய்வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவுரையில் சத்தான உணவு, நடைபயிற்சி, உடற்பயிற்சி ஆகியவை முக்கிய விஷயங்களாக வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கே மருத்துவமனை நிர்வாகம் தடைபோடுவது விநோதமாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.    

Tags : campus ,Zipmer ,
× RELATED கிம்ஸ் ஹெல்த் இலவச இதய மருத்துவ முகாம்...