×

ஹெல்மெட் சோதனையின் போது லாரியில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய எஸ்.பி.க்கு உத்தரவு

சென்னை, செப்.24: ஹெல்மெட் சோதனையின் போது, லாரி மோதி இளம்பெண்ணின் கால்கள் நசுங்கிய சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (23). சமீபத்தில் திருமணமானது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது தாயின் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்குவதற்காக பிரியதர்ஷினி செங்குன்றம் அடுத்த கே.கே.நகர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் கேக் வாங்கிவிட்டு, செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்குள்ள போலீஸ் பூத் அருகே போலீசார், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடித்து, அபராதம் வசூலித்துக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் வந்த பிரியதர்ஷினியின் வண்டியை கம்பால் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால், அவர் பிரேக் பிடித்தபோது தடுமாறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி பிரியதர்ஷினியின் மீது மோதியது. அதில் அவரின் கால்கள் நசுங்கி படுகாயமடைந்தார். இதனையடுத்து அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள், விபத்திற்கு போலீசாரே காரணம் என்று கூறி, நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீசாரின் செயலால் இளம்பெண்ணின் கால்கள் நசுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், இச்சம்பவம் தொடர்பாக 3 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : SB ,teenager ,helmet test ,
× RELATED சிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம்: எஸ்.பி.இலக்கியா வலியுறுத்தல்