×

ஏடூர் ஊராட்சியில் சமூக விரோதிகளின் கூடாரமான நூலகம் : நூல்கள் மாயமானதால் மாணவர்கள் விரக்தி

கும்மிடிப்பூண்டி, செப். 24:  ஏடூர் ஊராட்சியில் 3 ஆண்டுகளாக பயன்பாடற்று கிடக்கும் நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர்.  கும்புளி, ஏடூர் காலனி, ஏடூர், கொண்டமா நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கவும், அன்றாடம்  நடக்கும் நாட்டு நடப்பு மற்றும் அரசின் செயல் திட்டங்கள் எளிதில் அறிந்து மக்கள் பயன்படும் வகையில் நூலகம் திறக்கப்பட்டது. இங்கு பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கான புத்தகங்கள், இலக்கிய, கவிதை புத்தகங்கள் உயர் கல்வி படிப்பவர்கள், தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்கான புத்தகங்கள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு  என பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் தினசரி, வார, மாத இதழ்களும் வைக்கப்பட்டன. இதனால் இப்பகுதி மாணவ, மாணவிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைந்து வந்தனர்.நூலகத்தை நன்கு பராமரிக்கவும், நூல்களை பாதுகாக்கவும் ஊனமுற்ற ஒருவரை  நியமித்து, அவருக்கு மாத ஊதியமாக  ரூ. 2000 வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி இளைஞர்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் நன்கு பயன் அடைந்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த 3 வருடங்களாக நூலகத்தை பராமரித்து வந்தவருக்கு முறையாக ஊராட்சி நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. இதனால் அவர், நூலகத்தை முறையாக திறந்து பராமரிப்பது இல்லை. மேலும், சந்தா தொகை செலுத்தாததால் தின இதழ், வார, மாத இதழ்களும் நிறுத்தப்பட்டது.  மாணவர்களுக்கு பொது அறிவை வளர்க்கக்கூடிய புத்தகங்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் கரையான் அரித்து பாழானது. விலை உயர்ந்த புத்தகங்கள் மாயமானதாக தெரிகிறது. இதையடுத்து நூலக கட்டிடத்தை அரசு வேலைக்களுக்கு பயன்படுத்தும் சிமென்ட் மூட்டைகள் வைத்தல், வேலைக்கு வரும் ஆட்களை தங்க வைத்தல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி  இரவு நேரங்களில் மர்மநபர்கள் மது அருந்துவதும், சீட்டு விளையாடுவதும் வழக்கமாகியுள்ளது. மேலும், சமூக விரோத செயல்களும் நடப்பதாக கூறப்படுகிறது.

எனவே, கிராமப்புற மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில்கொண்டு நூலகத்தை முறையாக பராமரிக்கவும், மாயமான நூல்களுக்கு பதிலாக தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்ப விஞ்ஞானத்துக்கு ஏற்ப அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில்  சிறந்த நூல்களை வைக்கவும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Adoor ,
× RELATED சிறுமிகளை பலாத்காரம் செய்த...