×

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஏஐடியுசி ஆதரவு

புதுச்சேரி, செப். 24: ஏஐடியுசி புதுவை மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
 10 வங்கிகளை இணைத்து 4 ஆக சுருக்குவது என்ற அரசின் முடிவினை எதிர்த்து வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் செய்திட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அரசு தனது நிலைப்பாட்டினை மாற்றி கொள்ளாவிட்டால், நவம்பர் மத்தியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் உள்ளனர். வங்கி ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு ஏஐடியுசி புதுச்சேரி மாநிலக்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. சர்வதேச வங்கிகளோடு போட்டியிடுவதற்கு ஏதுவாக, நமது நாட்டு வங்கிகள் இணைத்து பெரிதாக்கப்படுவதாக அரசு கூறுவது நகைப்பிற்குரியதாகும். அனைத்து பொதுத்துறை வங்கிகளின் மூலதனங்களை இணைத்தாலும் சர்வதேச வங்கிகளுக்கு அது ஈடாகாது. விவசாயிகளை வட்டிகாரர்களிடம் இருந்து காப்பாற்றிட கடனுதவி அளிக்கும் கிராம வங்கிகளே நமது நாட்டிற்கு தேவை.

ஏற்கனவே இருமுறை செய்யப்பட்ட வங்கி இணைப்புகள் எந்த பலனையும் தரவில்லை. வராக்கடன் அளவு குறையவில்லை. இணைக்கப்பட்ட வங்கிகள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. பல கிளைகள் மூடப்பட்டுள்ளன. ஊழியர்களின் பணி மூப்பு நிலை குழப்பமடைந்துள்ளது. தனியார் வங்கிகளுக்கு சாதகமான வர்த்தக சூழலை உருவாக்கவே வங்கி இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதை ஏஐடியுசி கடுமையாக எதிர்க்கிறது. புதுச்சேரியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்களுக்கு முழு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் ஏஐடியுசி புதுச்சேரி மாநிலக்குழு தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : AITUC ,bank employees ,strike ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு