×

சேறும் சகதியுமான சாலையை சீரமைப்பதில் மெத்தனம் வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை, செப். 24:  சேறும் சகதியுமான திருக்கண்டலம் - பூச்சி அத்திப்பேடு கிராம சாலையை சீரமைக்காததை கண்டித்து கிராம மக்கள் வாகனங்களை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர் பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ - மாணவிகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். மேலும் திருக்கண்டலம் மட்டுமல்லாமல் அதைச்சுற்றியுள்ள கல்மேடு, அண்ணாநகர், நெய்வேலி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் திருக்கண்டலத்தில் இருந்து பூச்சி அத்திப்பேடு மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில்  உள்ள தனியார் கம்பெனிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில்  வேலைக்கு செல்வதற்கு திருக்கண்டலம் - பூச்சி அத்திப்பேடு சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் மேற்கண்ட கிராமங்களில் உள்ள அரசு  பள்ளிகளுக்கு செல்லவும் ஆசிரியர்கள் இச்சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.  மேலும் திருக்கண்டலம் கிராமத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட தனியாருக்குச் சொந்தமான செங்கல் சேம்பர்கள் உள்ளது. இந்த சேம்பர்களுக்கு செல்லும் லாரிகளால் கிராம சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது,
இந்த திருக்கண்டலம் - பூச்சிஅத்திப்பேடு பகுதியில் உள்ள 2 கி.மீட்டர் தூர சாலையை சீரமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் திருக்கண்டலம் கிராம சாலையில் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  திருக்கண்டலம்,  அண்ணாநகர், நெய்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களாகிய நாங்கள் பூச்சி அத்திப்பேடு மற்றும் செங்குன்றம் பகுதிக்கு செல்ல இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.  திருக்கண்டலம் முதல் பூச்சி அத்திப்பேடு வரை உள்ள சாலை 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது.தற்போது இச்சாலையில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. தற்போது பெய்து வரும் மழைநீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக உள்ளது. பாதசாரிகள் சேற்றில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். எனவே,  சாலையை சீரமைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருக்கண்டலம் - பூச்சி அத்திப்பேடு கிராமத்தை இணைத்து கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும்’’ என கூறினர்.

Tags : roads ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...