×

உத்திரமேரூர் அருகே மேல்பாக்கம் கிராமத்தில் உடைந்து தொங்கி கொண்டிருக்கும் மின் கம்பம்

உத்திரமேரூர், செப்.24: உத்திரமேரூர் அருகே மேல்பாக்கம் கிராமத்தில், பழுதடைந்த மின் கம்பம் உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு, களியாம்பூண்டி துணை மின் நிலையத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகள், தெருக்கள் உள்பட பல இடங்களில் மின் கம்பங்கள் அமைத்து, அதில் இருந்து உயரழுத்த வயர்கள் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோல் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை, மின்வாரிய ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் பழுதடைந்து உடையும் நிலையில் உள்ளது. மேல்பாக்கம் ஊராட்சி சேவை மைய கட்டிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் பழுதாகி, அதில் உள்ள சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், அந்த மின் கம்பம், எலும்பு கூடுபோல் தொங்கிய நிலையில் காணப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன் உடைந்து தொங்கிய நிலையில் உள்ளது.

இந்த ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் கிராம சபை கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த கட்டிடம் அருகே குடியிருப்புகள் ஒருபுறம் இருக்க, குழந்தைகள் விளையாடும் மைதானமும் உள்ளது. இதுபோல் மின் கம்பம் உடைந்து 2 மாதங்கள் ஆகிறது. இதுபற்றி பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரிய ஊழியர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
 உடைந்த நிலையில் உள்ள இந்த மின் கம்பம் வழியே மின்சாரம் செல்வதால், அப்பகுதியை கடந்து செல்ல கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன், பழுதடைந்துள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : village ,Melapakkam ,Uthramerur ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...