×

காங்கிரசில் 11 பேர் விருப்ப மனு தாக்கல்

புதுச்சேரி, செப். 24: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரசில் 11 பேரும், அதிமுகவில் 7 பேரும், பாஜகவில் 6 பேரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்.21ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியான காங்கிரசில் விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டன. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கூடப்பாக்கம் ஜெயக்குமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், அவரது மனைவி ஜஸ்டின், காசிலிங்கம், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, காமராஜர் நகர் தொகுதி முன்னாள் கவுன்சிலர் தமிழரசி, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பரணிதரன், மாநில பொதுச்செயலாளர் சங்கர், சிறப்பு அழைப்பாளர் சேகர், காமராஜர் நகர் தொகுதி முனுசாமி, கேசவ ராமானுஜம் உள்ளிட்ட 11 பேர் விருப்பு மனுக்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர். துணை தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ் ஆகியோர் மனுக்களை பெற்றனர். புதுச்சேரி அதிமுகவினரும் இத்தேர்தலில் களமிறங்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்காக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர், மாநில துணை செயலாளர் கணேசன், உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம், காமராஜர் நகர் தொகுதி செயலாளர் ஜானிபாய், காமராஜர் தொகுதி அவைத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட 7 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நேர்க்காணல் நடைபெற்றது.  பாஜக சார்பில் முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக்பாபு, விசிசி நாகராஜன், டாக்டர் தியாகராஜன், பொறியாளர் பிஎஸ்எஸ்.கணேஷ் மற்றும் வழக்கறிஞர் கமலினி (ராஜ்பவன்), பாஸ்கர், ரங்கராஜன் (காமராஜர் நகர்) உள்ளிட்ட 6 பேர் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை சித்தானந்தா நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அளித்தனர்.

மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் துணைத் தலைவர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். அப்போது, பொருளாளர் சங்கர் எம்எல்ஏ, துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், செயலாளர்கள் சாய் சரவணன், நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.காங்., அதிமுக, பாஜகவில் விருப்ப மனுதாக்கல் மும்முரமாக நடந்துள்ளதால், புதுச்சேரி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் இத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.  மேலும், என்ஆர் காங்., அதிமுக, பாஜக கூட்டணியில் காமராஜர் நகர் தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்று கட்சி மேலிடம் பேசி வருகிறது. எனவே, விருப்ப மனுக்கள் பெற்றாலும், அதிமுக, பாஜக தலைமையின் பேச்சுவார்த்தைக்கு பிறகே எந்த கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது தெரியவரும்.

Tags : Congress ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...