×

பிரதமர் மோடி - சீன அதிபர் வருவதால் மாமல்லபுரம் சாலைகளில் மாடுகள் திரிந்தால் நடவடிக்கை

திருக்கழுக்குன்றம், செப். 24: மாமல்லபுரத்துக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஆகியோர் வருவதால், சாலைகளில் மாடுகளை விடக்கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்துக்கு அக்டோபர் 11ம் தேதி பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகின்றனர். அவர்கள், மாமல்லபுரத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட உள்ளனர். மேலும், இந்தியா - சீனா இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து இரு நாட்டு தலைவர்களின் வருகையையொட்டி  மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், விடுதி, ரிசார்ட் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் காவல்துறை சார்பில் நடந்தது.

அப்போது, மாமல்லபுரத்தில் ஓட்டல், விடுதிகளில் மாதக்கணக்கில் தங்கியுள்ள வெளிநாட்டு பயணிகளின் பாஸ்போர்ட், விசா, அவர்கள் குறித்த முழு விவரங்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். விடுதிகள், ஓட்டல்களில் தங்குவதற்காக வருபவர்களின் புகைப்படத்தை சிசிடிவி கேமராவில் பதிவு செய்து, அவர்களது அசல் அடையாள அட்டைகளை பெற்ற பிறகே அறை ஒதுக்க வேண்டும். 12, 13 ஆகிய தேதிகளில் யாருக்கும் அறை ஒதுக்க கூடாது. ஆன்-லைன் மூலம் அறை முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில்,  செயல் அலுவலர் லதா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,  ‘பேரூராட்சி பகுதியில் சாலையோரம் தற்காலிகமாக வைத்துள்ள கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் கடைகளை அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், மாமல்லபுரம் பேரூராட்சியின் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும். அப்படி, தவறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Modi ,Chinese ,President ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...