×

சிறு மழைக்கே குண்டும் குழியுமாக மாறிய ராஜவீதி : வாலாஜாபாத் பேரூராட்சி மக்கள் அவதி

வாலாஜாபாத், செப். 24: சிறு மழைக்கே குண்டும் குழியுமாக மாறிய ராஜவீதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, பஸ் நிலையம், வங்கிகள், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
மேலும், வாலாஜாபாத் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்து, அங்கிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட பல்வேறுபகுதிகளுக்கு சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சிறிய சாலைகள் முதல் முக்கிய சாலைகள் வரை குண்டும் குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

வாலாஜாபாத் பிரதான சாலையான ராஜவீதி, வாலாஜாபாத் ரவுண்டானாவில் இருந்து வால்பாறை பகுதி வரை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், மறைமலைநகர், மேல்மருவத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இச்சாலையில் செல்லவேண்டும்.
தற்போது பெய்து வரும் மழையால், வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறிவிட்டது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலில், ஆம்புலன்ஸ் சிக்கி கொள்வது தொடர்கதையாக உள்ளது. இந்த குண்டும் குழியுமான சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கழிவுநீர் கலந்து, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் செங்கல்பட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த ராஜவீதியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால்,  பெய்து வரும் சிறு மழைக்கே இந்த சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது. இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நெடுஞ்சாலைத் துறை, இந்த சாலையை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Walajabad ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...