×

வீடு கட்டும் திட்டத்துக்காக மணல் எடுக்க சென்ற பிடிஓக்கள் காரை பொதுமக்கள் முற்றுகை

பண்ருட்டி, செப். 24: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது காவல்துறை அதிகாரியிடம் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு ஆற்றிலிருந்து மணல் எடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறியிருந்தார். இதன்பேரில் அக்கடவல்லி பகுதியில் உள்ள பெண்ணை ஆற்றில் அண்ணாகிராமம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு பிடிஓக்கள் முன்னிலையில் மணல் வழங்கப்பட்டது. அப்போது திடீரென ஆற்றில் மணல் எடுக்க சென்றதால் ஒருசிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அரசு சார்பில் மணல் எடுப்பதாக கூறியதின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களுக்கு ஆற்றில், குளத்தில் மணல் எடுப்பது சம்பந்தமாக முன்கூட்டியே அரசு அதிகாரிகள், பிடிஓக்கள் தெரிவிப்பதில்லை. இந்நிலையில் நேற்று பண்ருட்டி அருகே கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் அதே ஊரை சேர்ந்த இரு பயனாளிகளுக்கு வீடு கட்ட மணல் எடுக்க அதிகாரிகள் வந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென பிடிஓக்கள் சீனுவாசன், சக்தி, சரவணன் ஆகியோர் வந்த காரை முற்றுகையிட்டு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மணல் எடுத்தால் தங்கள் பகுதியில் நீர்மட்டம் குறைந்துவிடும் என்று தெரிவித்தனர். அதிகாரிகள் அதற்கு நீர்மட்டம் குறையாது, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்பேரில்தான் நாங்கள் மணல் எடுப்பதாக கூறினர். இருப்பினும் விடாப்பிடியாக மணல் எடுப்பதற்கு விடவில்லை. இதில் வீடுகட்ட உள்ளூர் பயனாளிகளும் பலன்அடைவார்கள் என கூறியும் விடவில்லை. இதனால் அதிகாரிகள் மணல் எடுக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : house ,PDOs ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்