×

நெற்பயிரில் சான்று விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்

கடலூர், செப். 24:   கடலூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் உலகம்மை முருகக்கனி  விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெற்பயிரில் சான்று விதை பண்ணை அமைத்து தரமான, பிற இதர கலப்பில்லாத இனத்தூய்மை பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதன் மூலம், அரசின் கொள்முதல் மானியம் பெற்று, விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.நடப்பு சம்பா பருவத்தில் டி.கே.எம்-13, கோ.ஆர்-50, சம்பா சப்-1, என்.எல்.ஆர்-34449, போன்ற ரகங்களை சாகுபடி செய்து விதை பண்ணை பதிவு செய்யலாம்.  விதை பண்ணை பதிவை உரிய விதைப்பறிக்கை படிவத்தில்   இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, மூன்று நகல்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து,  ஒரு ஏக்கருக்கு வயலாய்வு கட்டணமாக ரூ.60, விதைப்பறிக்கை பதிவு கட்டணமாக ரூ.25, விதை பரிசோதனை கட்டணமாக ஒரு குவியலுக்கு, ரூ.30 செலுத்தி விதைச்சான்று உதவி இயக்குநர், கடலூர் அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும்.  நெல் விதை பண்ணை பூப்பருவத்தின்போது ஒரு முறையும், கதிர் முதிர்வின்போது ஒரு முறையும் விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு, கலவன் கணக்கீடு செய்யப்படும். எனவே, கலவன் அகற்றி விதை பண்ணையை பராமரிக்க வேண்டும்.  நெற்குவியல் உரிய விதைச்சான்று அலுவலரால் ஆய்வு செய்யப்பட்ட பின், மூட்டைகள் சீலிடப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு உரிய அறிக்கையுடன் அனுப்பப்படும்.  சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு சுத்தம் செய்து விதை மாதிரி எடுக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலையத்திற்கு விதை மாதிரி அனுப்பப்பட்டு பகுப்பாய்வு முடிவுகள் பெறப்படும்.நெற்பயிரில் சான்று விதை பண்ணைகளை அமைத்து, தரமான விதை உற்பத்திக்கு உதவுவதோடு அரசின் கொள்முதல் மானியம் பெற்று அதிக லாபமும் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Tags : Seed Production Technologies ,
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...