×

சிதம்பரம் ஓமகுளம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்

சிதம்பரம், செப். 24: சிதம்பரம் நகரில் உள்ள நீர்நிலைகள் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையொட்டி நடராஜர் கோயில் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசம் குளம் தூர்வாரும் பணி அண்மையில் தொடங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க இக்குளத்தில் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை நடக்கும் திருவிழாவின் நிறைவு நாளில் தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். ஞானப்பிரகாசம் குளம் ஆக்கிரமிப்பினாலும், கழிவுநீர் கலந்ததாலும் மாசடைந்து இக்குளத்தில் பல ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இந்த புகழ்பெற்ற குளத்தை தூர்வார வேண்டும் என சிதம்பரம் வர்த்தகர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது மக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனையொட்டி ஞானப்பிரகாசம் குளத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இந்நிலையில் சிதம்பரம் மேற்கு பகுதியில் பதஞ்சலி முனிவரால் பூஜிக்கப்பட்ட புகழ்பெற்ற நாகச்சேரி குளத்தையும் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன. இதேபோன்று சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ள பழமை வாய்ந்த ஓமகுளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. நேற்று காலை 2வது நாளாக ஓமகுளத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது.


Tags : Demolition ,buildings ,Chidambaram Omakulam ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...