×

வடக்குமேலூரில் இயங்கும் விஏஓ அலுவலகம் நெய்வேலி பெரியார் சதுக்கத்தில் மாற்றப்படுமா?

நெய்வேலி, செப். 24: நெய்வேலி அடுத்து வடக்குமேலூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சொந்த கட்டிடம் இல்லாமல் இ-சேவை மைய அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக  இயங்கி வருகிறது. இந்த கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நெய்வேலி டவுன்ஷிப் நகர் பகுதிகள் வட்டம் 1 முதல் 30 வரை, மாற்று குடியிருப்புகள், சிலோன் குடியிருப்புகள், இந்திரா நகர், வடக்கு மேலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு சான்றிதழ்பெற வந்து செல்கின்றனர். கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகம் வாடகை கட்டணம் செலுத்த முடியாததால் வடக்கு மேலூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு மக்கள் செல்ல வேண்டுமென்றால் கும்பகோணம் - சென்னை சாலையில் உள்ள வடக்குத்து பஸ் நிலையம் இறங்கி ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து தான் செல்ல வேண்டும். இல்லையெனில் நெய்வேலி டவுன்ஷிப் மத்திய  பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். இதனால் நெய்வேலி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வயதானவர்கள் என அனைவரும் மிகவும் அவதிப்படும் அவலநிலை உள்ளது. மேலும் நெய்வேலி டவுன்ஷிப் நகரில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலகம் இருக்கும் இடம் தெரியாத நிலை உள்ளது. இதனை பயன்படுத்தி இங்கு அதிகளவில் இடைத்தரகர்கள் உருவாகி உள்ளனர். என்.எல்.சி ஊழியர்களிடம் அதிக தொகை கிடைப்பதால் புரோக்கர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். பொது மக்கள் இடைத்தரகர் இல்லாமல் கையெழுத்து பெறுவதில் பல்வேறு இடையூறுகள் உள்ளது. மேலும் கிராம சேவை மையத்தில் இயங்குவதால் ஊராட்சியில் உள்ள பணிகள் பாதிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். வடக்குமேலூர் கிராம நிர்வாக அலுவலகத்தை அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலி பெரியார் சதுக்கத்தில் செயல்பட்டது போன்று மீண்டும் செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : office ,VAO ,Neyveli Periyar Square ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!