×

நிவாரணம் வழங்காததை கண்டித்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை

வேப்பூர், செப். 24: வேப்பூர் அருகே நிவாரணம் வழங்காததை கண்டித்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிட்டனர். ஆனால் மக்காச்சோளம் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் திடீரென படை புழுவால் பயிர் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நிவாரணம் வழங்காததை கண்டித்தும், நிவாரணம் வழங்காமல் விடுபட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் நேற்று சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் வட்டாட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக விடுபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Revenue Inspector ,office ,
× RELATED வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு