×

குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் ‘ஆப்சென்ட்’

பேரையூர், செப். 20: பேரையூரில் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரையூர் தாலுகா அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி, டி.கல்லுப்பட்டி ஒன்றிய விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு துணை தாசில்தார் செல்வராஜ் மற்றும் சில உதவி அதிகாரிகள் வந்திருந்தனர்.  இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய அதிகாரிகள் வரும் வரை கூட்டத்தை நடத்தக்கூடாது என கோஷமிட்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் முக்கிய அதிகாரிகள் வரவில்லை. இதையடுத்து, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விவசாயிகள், அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் கலைந்து சென்றனர். முன்னதாக விவசாயிகள் கூறுகையில், ‘குறைதீர் கூட்டத்திற்கு ஒவ்வொரு முறையும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வருவதில்லை. கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கவில்லை. இப்போது நடக்கும் குறைதீர்க்கும் கூட்டமும் பெயரளவுக்கு நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு பயனில்லை. பல மாதங்களாக விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வரவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம்’ என கூறினர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்