×

கீழக்கரையில் கட்டி முடித்தும் திறப்பு விழா காணாத தாலுகா அலுவலகம்

கீழக்கரை, செப். 20: கீழக்கரையில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் பணிகள் நிறைவடைந்து இரண்டு மாதங்கள் கடந்தும் திறப்பு விழா காணாமல் உள்ளது. கீழக்கரையில் கடந்த 14.03.2015 முதல் தனி தாலுகா அலுவலகம் தொடங்கப்பட்டு தற்காலிகமாக நகராட்சியின் ஒரு பகுதியிலும், மலேரியா கிளினிக்கின் ஒரு பகுதியிலும் செயல்பட்டு வருகிறது. இதில் தினமும் ஆயிரகணக்கானவர்கள் தாலுகா அலுவலகப்பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகையில் இடநெருக்கடி ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கீழக்கரை தொழிலதிபர் சாலஹூதீன் தனக்கு சொந்தமான ஈ.சி.ஆர். சாலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் இடத்தை தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு அரசுக்கு தானமாக வழங்கினார். இதைத்தொடர்ந்து புதிய அலுவலகம் கட்டும் பணிக்கு அரசு ரூ.2 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி நடைபெற்றது. பணிகள் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் திறக்கப்படவில்லை.

தற்காலிக தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். ஆகவே புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தை உடனடியாக திறப்பதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தி.மு.க மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ஹமீது சுல்தான் கூறுகையில், ‘தற்போது செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகம் இடம் போதுமான அளவு இல்லாததால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய தாலுகா அலுவலகத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : building ,inauguration ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...